தமிழுக்கு முதலிடம் என்னும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையிலான பிரேரணை நிறைவேற்றம்!

மட்டக்களப்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழுக்கு முதலிடம்’ என்னும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையிலான பிரேரணை சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் 36ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான இன்றைய சபை அமர்வின்போது கடந்த அமர்வின் அறிக்கை வாசிக்கப்பட்டு சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தமிழுக்கு முதலிடம் என்னும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையிலான பிரேரணையொன்று மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் வே.தவராஜாவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை ஊடறுத்துச்செல்லும் வீதியை மக்கள் பாவனைக்காக திறந்துவிடுவதற்கான பிரேரணையொன்று உறுப்பினர் சிவம் பாக்கியநாதனால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதன்போது, முதல்வரின் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு அவற்றுக்கு உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்ட நிலையில் மட்டக்களப்பு ரயில் வீதிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீதிக்கு மாநகரசபையினால் ஒதுக்கீடுசெய்யப்படவுள்ள 16 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு தொடர்பாக உறுப்பினர்களினால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறித்த வீதியினை அழகுபடுத்தும் வகையில் நடைபாதை மற்றும் மின்சார கம்பங்கள் உட்பட குறித்த வீதியை புனரமைக்க மாநகரசபையின் 16 மில்லியன் ரூபாயினை ஒதுக்கீடுசெய்யவும் அதற்கான திட்டங்களை தயாரிக்க நடவடிக்கையெடுக்கவும் சபையின் அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கு உறுப்பினர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இதேபோன்று, புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபையில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் 40 வருடங்களுக்குப் பின்னர் ஆளும் கட்சியொன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று இராஜாங்க அமைச்சுப் பதவியினை பெற்றுள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும் இதன்போது வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.