தமிழ் தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றம்!

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு 132 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செலவுக்கட்டளை 207 இற்கு எதிராக எதிர்க்கட்சி தமிழ் தரப்பினர் வாக்கெடுப்புக் கோரிய நிலையில் அதற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
நிதி ஒதுக்கீடு தொடர்பான சபையின் ஆதரவை சபாநாயகர் கோரியபோது அமைச்சின் செலவுக்கட்டளை 207இற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வாக்கெடுப்புக் கோரினார்.
அதனைத்தொடர்ந்து, சபாநாயகர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். வாக்கெடுப்பு சபையில் இலத்திரனியல் அடிப்படையில் இடம்பெறாமல் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் ஆசன வரிசையின் அடிப்படையில் இடம்பெற்றது.
அதன்பிரகாரம் குறித்த செலவுக் கட்டளைக்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் வழங்கப்பட்டு 132 மேலதிக வாக்குகளால் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் விவாதத்தில் உரையாற்றும் போது ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பபை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.