தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன – இராதாகிருஷ்ணன்
In இலங்கை December 6, 2020 11:12 am GMT 0 Comments 1349 by : Dhackshala

தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால் அரசாங்கம் அதற்கு பொறுப்புகூறியாகவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படியே நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
மக்கள் சார்பில் நாடாளுமன்றத்தில் கருத்துகளை கூறுவதற்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது.
தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பு தொடர்பில் அல்லாமல் ஏனைய விடயங்களை பேசுவதற்கான அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் துவேசம் கக்கும் உறுப்பினர்களே அதிகம் இருக்கின்றனர். அவ்வாறு துவேசம் பேசும் ஒரு அமைச்சர்தான் கூட்டமைப்பினரை தடைசெய்யவேண்டும் என சொல்கின்றார்.
அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. மக்கள் நினைத்தால் மட்டுமே அதனை செய்யமுடியும். அவரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம்.
சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களின் மனம் புண்படும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதனையும் கண்டிக்கின்றோம்.
பிள்ளையானை விடுதலை செய்தது எமக்கு பிரச்சினை இல்லை. அவ்வாறு தமிழ் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. அப்போதுதான் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது நடைமுறை சாத்தியமாகும்.
மஹர சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும். இச்சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமை மாநாட்டிலும் எதிரொலிக்கும்.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையே தொடர்ந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது” எனஅவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.