தமிழ் மக்களையே பயங்கரவாத தடுப்புச் சட்டம் மீண்டும் குறி வைக்கிறது! – செ.மயூரன்
In இலங்கை May 5, 2019 10:27 am GMT 0 Comments 2193 by : Yuganthini

தீவிரவாதத்தை ஒழிக்க பயன்படுமென தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்கிய பயங்கரவாத தடுப்புச் சட்டமே அவர்களுக்கு தற்போது பாதிப்பாக அமைந்துள்ளதென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பாகவும், சமகால அரசியல் நிவைவரம் குறித்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மயூரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“மூன்று தசாப்த யுத்த ஓய்வின் பின்னரான பத்து ஆண்டுகளில் எந்தவித அசம்பாவிதங்களிலும் ஈடுபடாது கண்ணியமாக நடந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் மீது வேண்டுமென்றே பெரும்பான்மையினத்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அதன் ஒரு அங்கமாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகிகளின் கைது நடவடிக்கை அமைந்துள்ளது. இது எமது விரலை வைத்து எமது கண்களை குத்தும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது.
புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கொடூர தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தி முழு இலங்கையையும் கதிகலங்க வைத்தனர்.
இந்நிலையில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்பதற்காக எந்தவித எதிர்ப்புமின்றி தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் பூரண ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டமும் ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடுப்பு சட்டமும் தமிழ் மக்களையே தற்போது பதம் பார்க்க ஆரம்பித்துள்ளது.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்புக்காக சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக அனுமதி பெற்று, வரலாற்றில் முதற் தடவையாக யாழ். பல்கலைக்கழகத்தை முழுமையாக பாதுகாப்புத் தரப்பினர் சோதனையிட்டனர்.
இதன்போது பல ஆண்டுகளாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது பழைய படம் ஒன்றிற்காகவும் சட்டத்திற்குட்பட்டு மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களின்போது பயன்படுத்தப்பட்ட சில பதாதைகளையும் வைத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவரையும், செயலாளரையும் கைதுசெய்து எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுத்து வைத்திருப்பதானது ஒட்டுமொத்த தமிழர்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் பாதிப்பை இந்த செயற்பாடு ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் 15 பல்கலைக்கழகங்களும் 03 வளாகங்களும் உள்ள நிலையில் அதிலும் அடிப்படைவாதத்தை போதிக்கின்ற பல்கலைக்கழகங்களுக்கு கூட சோதனைக்கு செல்லாத இராணுவம் யாழ்.பல்கலைக்கழகத்தை மட்டும் சோதனையிட்டதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியும் அனைத்து மக்களிடத்திலும் தற்போது எழுந்துள்ளது.
ஆயுதங்களுடனும் இராணுவ உயர் அதிகாரிகளின் தர முத்திரைகளுடனும் கைதானவர்களை ஒரு நாளிலேயே பிணையில் செல்ல அனுமதித்த இந்த அவசரகால சட்டம் தமிழ் மாணவர்களை மட்டும் பிணையில் செல்ல அனுமதிக்காததும் தீவிரவாதத்தை உருவாக்கும் வகையில் இனவாதத்தையும் தீவிரவாதத்தையும் தூண்டி வளர்த்துவிட்ட அரசாங்கத்தின் அங்கத்தினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் தண்டிக்காத போக்கையும் பார்க்கும்போது இலங்கை சட்டங்கள் முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்பதனை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.
குண்டு வெடித்த இடங்களிலும் குண்டு வைத்தவர்களின் கோட்டையாக விளங்கிய இடங்களையும் விட வடக்கில் அதிக சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தி யுத்த காலத்தில் இருந்ததைவிட அதிக கெடுபிடிகளை தமிழ் மக்கள் மீது அரசாங்கம் திணித்து வருகின்றது.
இதேவேளை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவரும் அரசாங்கமும் சிறுபான்மை மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்கு தீர்வு தருவார்கள் என்று காத்திருக்க, அவர்கள் தீர்வாக பயங்கரவாத தடைச் சட்டத்தையும், அவசரகால சட்டத்தையும் அதிகப்படியான சோதனைச் சாவடிகளையும் தந்தது மட்டுமல்லாது எமது மாணவர்களையும் இளைஞர்களையும் கைது செய்து சிறையிட்டுள்ளனர்” என அவ்வறிக்கையில் செந்தில்நாதன் மயூரன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.