தரமற்றவர்களின் ஆட்சியால் தரமற்றுப்போனது தமிழ்நாடு – சீமான் ஆவேசம்

தரமற்றவர்களின் ஆட்சியால் தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் ஆகியவை தரமற்றுப் போய்விட்டது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்னும் 5 ஆண்டுகளில் நாம் ஜெயிக்கப்போவது உறுதி என்று தெரிவித்த அவர், அதன்பிறகு தமிழ்நாடு என்ன ஆகிறது என பாருங்கள் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
நெல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில், “தமிழ்மொழி இறந்து போய் விட்டது. தி.மு.க. அதனைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வருவோம் என்கிறது தி.மு.க. ஆனால் இத்தனை ஆண்டுகள் என்ன செய்தது?
அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒரு இடத்தைக் கூட முஸ்லிம்களுக்கு அளிக்கவில்லை. ஆனால், முஸ்லிம்கள் 5 பேரை நாம் தமிழர் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.
நீர் மேலாண்மை என்றால் என்னவென்று ஸ்டாலின், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்குத் தெரியாது.
காங்கிரஸ் – பா.ஜ.க. தமிழ்நாட்டில் எதற்கு? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வென்று என்ன செய்யப் போகிறது? இந்த கட்சிகளுக்கு கச்சத்தீவு மீட்பு, எழுவர் விடுதலையில் என்ன நிலைப்பாடு?
திராவிடக் கட்சிகளில் அனைவருக்கும் வயதாகி விட்டது. அதனால் தான் மகன்களை இறக்கி விடுகின்றனர். அதிகமாக 5 ஆண்டுகளில் நாம் ஜெயிக்கப்போவது உறுதி. அதன்பிறகு என்ன ஆகிறது என பாருங்கள்.
இதுவரை இருந்த ஆட்சியாளர்கள் எல்லாம் அழுகிய குப்பைகள். அதனை தூய்மையாக்குவது தான் தூய்மை இந்தியா. தரமற்றவர்களின் ஆட்சியால் தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் ஆகியவை தரமற்றுப்போய் விட்டது.
நாம் தமிழர் ஆட்சியில் பட்டுப்பூச்சி வளர்த்தல், நெசவுத்தொழில், மீன் வளர்த்தல், பாய் பின்னுதல், கருப்பட்டி காய்ச்சுதல், கள் இறக்குதல், சர்க்கரை காய்ச்சுதல் ஆகியவை அரசு வேலைகளாக்கப்படும்.
குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். யு.கே.ஜி., எல்.கே.ஜி. இருக்காது. அவை அரும்பு, மொட்டு, மலர் வகுப்புகள் என அழைக்கப்படும். ஒன்றாம் வகுப்பு 6 வயதிலிருந்து தான் சேர்க்கப்படும். விளையாட்டு தான் கல்வி. தாய்மொழியில் கல்வி வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.