தற்கொலை குண்டுதாரிகளில் பெண் – அதிர்ச்சி தகவலை வெளியிட்டது அரசாங்கம்!
In ஆசிரியர் தெரிவு April 24, 2019 10:40 am GMT 0 Comments 4010 by : Benitlas
தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புபட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன.
ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியே ஏனைய இடங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களின் தலைவராவார். அத்தோடு இவர் லண்டனில் பட்டத்தாரி பட்டத்தினையும், அவுஸ்திரேலியாவில் முதுமானிப்பட்டத்தினையும் பெற்றவர் என்பதோடு வசதி படைத்தவராவார்.
இவர் தொடர்பான ஏனைய தகவல்களை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாதுள்ளது. இது தொடர்பான துரித விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த தாக்குதல்தாரிகளுடன் வேறு ஏதேனும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பது குறித்தும் சர்வதேச தொடர்புகள் ஏதேனும் காணப்படுகின்றதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன.
அத்தோடு இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச குழுக்களின் தலையீடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இது வரையில் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை இது தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன.
அத்துடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய காணொளிகள் உள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்“ என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.