தற்கொலை குண்டுதாரியின் உறவினர்களுக்கு விளக்கமறியல்

தற்கொலை குண்டுதாரியான ரில்வானின் உறவினர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தற்கொலை குண்டுதாரியான தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரில்வானின் இல்லத்திலிருந்து அவரின் மாமனார் மற்றும் மாமியார் உட்பட ஆறு பேர் நேற்று காத்தான் குடியில் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில், நீதவான் ரிஸ்வான் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்று காத்தான்குடியில் தற்கொலை அங்கி, அலைபேசிகள்-4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கி புத்தகம், மரணமடைந்த ரில்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் புகைப்படங்கள், ரில்வானின் தேசிய அடையாள அட்டை உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து இந்த தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, அவ்வீட்டிலிருந்த ரில்வானின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களுடன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணியதாக கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய தௌஹீத் ஜமாய்த்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகிகத்தில் கைதுசெய்யப்பட்டிருந்த நான்கு பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நீதவான் இவர்களை 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.