குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த உறவுகளின் சடலங்களுக்காய் காத்திருக்கும் அவலம்!
In இங்கிலாந்து April 29, 2019 7:52 am GMT 0 Comments 3159 by : Benitlas

இலங்கையில் இடம்பெற்ற இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த தங்களது உறவினர்களின் சடலத்தினை பெற்றுக்கொள்வதில் பிரித்தானியர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் இலங்கையில் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் அரங்கேறியவண்ணமுள்ளன.
குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 8 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இறந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர முடியாமல் வேதனையுடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.
சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக நான்குவகை செயல்முறைளை மேற்கொள்ள வேண்டும் என இன்ரர்போல் பரிந்துரை செய்துள்ளது.
உயிரிழந்துள்ள தங்களது உறவுகளின் முகத்தினை அடையாளம் காண்பித்தபோதிலும் டி.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டே இரண்டு சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான கடுமையான நடவடிக்கையால் உயிரிழந்துள்ள உறவினர்களின் சடலங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரித்தானியர்கள் கவலையுடன் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.