தாய்நிலமே எம்மை சாப்பிடக்கடவது!
May 6, 2018 11:20 am GMT
இன்னும் எம்
கண்விட்டு அகலாத
கரிநாளே!
உன்னில் படிந்த
ரத்த நெடியினை- எம்
கண்ணீரால் கழுவிடும் சாபத்தை
யாரிட்டார் உனக்கு?
உழைப்பையும் தாய்மையையும்
உணர்வாலே பூசித்து
நகர்ந்த உன் மாதத்தில்- எம்
இனத்தினை வேரறுக்கும்
கொடுங்கூர் ஆயுதத்தை
உனக்கு மட்டும் யார் கொடுத்தார்?
பகலோனே!
அன்று நீ
வீறுகொண்டு விழித்தது
எம் அன்னையரை
விதவைகளாக்கவா?
உயிரவிட்ட எம் உறவுகளின்
கடைசி கதறல்கள்
கேட்காமல் – அன்று
காற்றே உனக்கும்
காதடைத்துப் போனதா?
பிணமான எங்கள்
பிள்ளையரின் உடல்களும்
கிடைக்காமல் போகன்டும் என்றா
நிலவே நீகூட அன்று
நிசப்தமாய் பேசினாய்?
இயற்கையே உந்தன்
இத்தனை அங்கங்களும்- எம்
இனத்தின் அழிவுக்கு
துணைநின்ற போதும்
எம் தாய்நிலம் எம்மை
கைவிடவில்லையே!
** ** ** ** ** ** **
உயிர் பிரிந்தாலும் எம்
உடலை ஏந்தினாள்.
குண்டுகள் துளைத்த தன்
காயங்களுக்கு உள்ளே எம்
குருதியை மூடினாள்.
கசக்கி வீசப்பட்ட
எம் கண்ணகிகளை
அவள்தானே அரவணைத்தாள்.
எப்படி இழப்போம் அவளை?
இத்தனை இன்னல்களும்
இழைத்தாய் நீ.
இன்னும் போதாதெனில்
உரத்து நீ கட்டளையிடு.
தாய்நிலமே வாய்பிளந்து எம்
சந்ததியை சாப்பிடக்கடவது.
இருப்பினில் கிடைக்காத
அவளுக்கு எங்கள்
இறப்பினையேனும் கையளிக்கிறோம்.
-
என்ன தேடுகின்றாய்…
வண்ணத்துப் பூச்சியே நித்தமும் சுழன்று சுழன்று என்ன...
-
யாசகன்
மௌனத்துக்கு அனுமதியில்லை எனக்கும் அவளுக்குமான பயணங...