தாய்வானுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், “சீன அரசாங்கம் தாய்வான் உட்பட அதன் அண்டை நாடுகளை மிரட்ட முயற்சிக்கும் முறையை அமெரிக்கா கவலையுடன் குறிப்பிடுகிறது.
சீனா, தாய்வான் மீதான இராணுவ, தூதரக மற்றும் பொருளாதார அழுத்தத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாய்வான் பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களது பகிரப்பட்ட செழிப்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புகளை முன்னேற்றுவதற்காக எங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் துணை நிற்போம். அதில் ஜனநாயக தாய்வான் உடனான எங்கள் உறவுகளை ஆழப்படுத்துவதும் அடங்கும்’ என கூறினார்.
சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தீவு நாடான தாய்வான் உருவானது.
ஆனாலும் தாய்வான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் தேவைப்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசாங்கம் கூறி வருகிறது. இந்த சூழலில் தாய்வானை அச்சுறுத்தும் விதமாக சீனா சமீபகாலமாக தனது தென்கிழக்குப் பிராந்தியத்தில் இராணுவ படைகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.