தினேஷ் கார்த்திக் அதிரடி – வெற்றியிலக்காக 176 ஓட்டங்கள்!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இன் அதிரடி ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 175 ஓட்டங்களை குவித்துள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
அந்த அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட முதல் ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் கிறிஸ் லின் எதுவித ஓட்டமுமின்றி வருண் ஆரோனுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மான் கில்லும், நான்காவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய நிட்டிஸ் ரான 21 ஓட்டத்துடனும், சுனில் நரேன் 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு வெளியேற கெல்கத்தா அணி 11.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 80 ஓட்டங்களை பெற்றது.
இதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் தினேஷ் கார்திக் மற்றும் ரஸல் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க கொல்கத்தா அணி 15 ஓவர்களின் முடிவில் 100 ஓட்டங்களை பெற்றது. தினேஷ் கார்த்திக் 42 ஓட்டத்துடனும், ரஸல் 4 ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் இருந்தனர்.
16 ஆவது ஓவரின் 2 ஆவது பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக் அரைசதம் கடக்க, ரஸல் 14 ஓட்டத்துடன் 16 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிரித்வெய்ட்டும் 4 ஓட்டத்துடன் வெளியேறினார்.
இறுதியாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 175 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 9 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்களாக 97 ஓட்டத்துடனும், ரிங்கு சிங் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் வருண் ஆரோன் 2 விக்கெட்டுக்களையும், உஷேன் தோமஸ், ஸ்ரேயஸ் கோபால் மற்றும் உனாட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இந்தநிலையில் 176 என்ற வெற்றியிலக்கினை நோக்கி ராஜஸ்தான் அணி இன்னும் சற்றுநேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.