திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம்!
மதுபோதையில் வாகனத்தை ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் திமுத் கருணாரத்னவிற்கு, இலங்கை கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.
இதன்படி திமுத் கருணாரத்னவிற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு 7500 அமெரிக்க டொலர்களை தண்டப்பணமாக செலுத்தும்படி பணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே திமுத் கருணாரத்னவிற்கு குறித்த அபராதத் தொகையினை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 31ஆம் திகதி அதிகாலை கொழும்பு பொரளை பகுதியில் மது போதையுடன் காரில் பயணித்த திமுத் கருணாரத்ன, முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்து ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்.
கருணாரத்ன ஏற்படுத்திய குறித்த விபத்தினால் முச்சக்கர வண்டி சாரதி காயங்களுக்கு உள்ளாகியதுடன், வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் முச்சக்கர வண்டி சாரதிக்கு பெரிதளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் திமுத் கருணாரத்னவின் மீது, மதுபோதையில் வாகனம் ஓட்டியமை, சிவப்பு விளக்கினை மதிக்காமல் வாகனம் ஓட்டியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கிற்காக திமுத் கருணாரத்ன கடந்த முதலாம் நீதிமன்றத்திற்கு ஆஜராக பணிக்கப்பட்டிருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் சபையும் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்து, அவரின் வாகன அனுமதிபத்திரத்தை இரத்து செய்தது.
இதேநேரம் தான் செய்த குற்றங்களுக்காக திமுத் கருணாரத்ன, தனது முகநூல் பக்கம் மூலம் மன்னிப்பு கோரினார்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் தற்போது அவருக்கு 7500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி, திமுத் கருணாரத்ன, தலைமையில் தென்னாபிரிக்க மண்ணில் வரலாற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இதனால் நன்மதிப்பு பெற்ற திமுத் கருணாரத்ன, எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணினையும் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வாறானதொரு துரதிஷ்டமான சம்பவம், இரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளதோடு, சமூகவலைதளங்களில் காரசாரமான விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.