திலங்க சுமதிபாலவிற்கு எதிராக விளையாட்டு கழகங்கள் போர்கொடி
In ஆசிரியர் தெரிவு April 9, 2019 6:35 am GMT 0 Comments 2785 by : Benitlas

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொல்ட்ஸ், நீர்கொழும்பு மற்றும் மாரவில சேவியர் விளையாட்டு கழகங்களே இவ்வாறு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன. அத்துடன், குறித்த கடிதத்தின் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமது சகோதரர் சூதாட்ட வர்த்தகத்தில் ஈடுபடுவதாக திலங்க சுமதிபால நாடாளுமன்றத்தில் கூறியதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஹன்சார்ட் அறிக்கையும் குறித்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சூது விளையாட்டுக்கு வரி செலுத்துவது தொடர்பான அறிக்கையும் குறித்த கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
திலங்க சுமதிபால இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுக் குழுவின் முகாமையாளர் சபையின் அங்கத்தவராகவும் தேசிய அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர் மற்றும் சர்வதேச உறவுகள் மற்றும் தேசிய திட்டங்களின் தலைவராகவும் செயற்படுவது விளையாட்டு சட்டத்துக்கு முரணானது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க நெறிமுறைகளின் கீழ் இவ்வாறான சூது விளையாட்டுடன் தொடர்புடைய ஒருவர் கிரிக்கெட்டுடன் சம்பந்தப்படுவது தவறானது என குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.