தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு… கேள்விக் குறியாகும் மக்களாட்சி
June 3, 2018 3:47 am GMT
யாரைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதை மட்டும் முடிவு செய்துவிட்டு ஒட்டுமொத்த மரியாதைக்குரிய சமுகமும் கலைந்து சென்றுவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பது மக்களாட்சி அல்ல.
மக்களின் அன்றாட சிக்கல்களைப் பேசித்தீர்ப்பதன் வாயிலாக எதிர்கொள்ள வேண்டியதும் அந்த மக்களாட்சிக்கு அவசியமாகிறது. மக்கள் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, போராடுகிறவர்கள் மீது தடியடி, போராட்டங்களை ஒருங்கிணைப்போர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு என ஓர் ஜனநாயக அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவரும் சட்டம் ஒழுங்குக் கொள்கையானது காலனி ஆதிக்க காலத்தையே நினைவுபடுத்துகிறது.
போராட்டம் என்பது மக்களாட்சியின் வடிவம் என்பதனை இவர்கள் மறந்து விடார்களோ? அல்லது நாட்டை ஆள்பவர்களுக்கு மக்களாட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது . ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகப் போராடியவர்களுக்கு ஏன் இத்தனைக் கெடுபிடிகள்…?
தமிழகத்தின் துறைமுக நகரமான தூத்துக்குடியில் நூறு நாள்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தங்களின் எதிர்ப்பை அப்பகுதி மக்கள் அழுத்தமாகவும், அமைதியாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 99 நாள்கள் அமைதியாகப் போராடிய மக்களுக்கு 100ஆவது நாளில் மட்டும் வன்முறை கைவந்துவிடுமா…? இந்த இடைப்பட்ட நாள்களில் அரசாள்வோர் சார்பில் பேச்சுவார்த்தை ஏதாவது முன்னெடுக்கப்பட்டனவா…? என்றால், எதுவுமே நிகழ்த்தப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிமையாளர் நரேந்திர மோடி அரசின் நெருங்கிய நண்பரான அனில் அகர்வால் என்பவர் . வேதாந்த சிசோர்ஸ் என்னும் நிறுவனப் பெயர் கொண்ட இந்த நிறுவனத்தின் தலைமையிடம் லண்டன்.
இநத நிறுவனத்தை முதன்முதலில் அமைப்பதற்குத் தேர்ந்தெடுத்த நிலம் குஜராத் மாநிலத்தில். ஆனால் அந்த மாநில அரசு ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்க மறுக்க தொடர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா ஆகியனவும் குஜராத்தை பின்பற்றி தமது மக்கள் நலன் கருதி அனுமதி மறுத்தன.
இந்த ஐந்து மாநிலங்களும் ஒதுக்கித் தள்ளியபின் கடைசியாகத் தமிழ்நாட்டுக்குள் அந்த நிறுவனம் தமிழக அரசின் சாமரம் வீசலுடன் கால் பதிக்க அதற்கு ஏதுவாக தூத்துக்குடி அமைந்துபோனது. பலிக்கடா ஆக்கப்பட்டார்கள் அந்தப் பகுதி மக்கள்.
பெண்கள்,முதியவர்கள் என ஈவிரக்கம் இல்லாமல் பச்சைப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது இதற்கு எதிரான போராட்டத்தில். நாடு தழுவிய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்த பின்னும் அப்பட்டமான அரச பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. அதிகார வெறியில் குடியரசின் தார்மீக நெறிகளையும் மக்களாட்சியின் மாண்புகளையும் தீக்கிரையாக்கி விட்டனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அங்குள்ளவர்களின் வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது.
இதெல்லாம் தமிழ்நாடு இரட்டை முதல்மைச்சர்களைக் குறைத்து மதிப்பிட்டதன் விளைவோ எனவோ எண்ணத் தோன்றுகிறது ஜெயலலிதாவின் அடிமைகளாக நடித்தவர்களை அடிமைகளாகவே நம்பியது மாபெரும் தவறு. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அடிமைகள் எல்லாம் தங்களை ஜெயலலிதாவாகக் கட்டமைத்துக் கொண்டார்கள்.
அதிகாரத்தைத் தகக வைத்துக் கொள்வதற்காக, சசிகலா குடும்பத்தைத் தூக்கி எறிந்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியின் உறவை வளர்த்துக் கொண்டார்கள் இந்த இரட்டையர்கள். இதனால் தங்களுக்கு எதிராக எழுகின்ற சிறு குரலையும் ஒடுக்கத் தொடங்கினர். கடந்த ஓராண்டில் மக்களையும் போராட்டக்காரர்களையும் அடக்குவதில் மூர்க்கத்தனமாகவே செயல்பட்டார்கள்.
இந்த ஏதேச்சதிகாரப் போக்கைத் தொடக்கத்திலேயே கண்டுணர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருந்த எதிர்க்கட்சிகள் அறிக்கைகள் மட்டுமே விட்டுக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர், திமுகவின் செயல் தலைவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. அரசை உலுக்கும்விதமாக ஆட்சியை மாற்றும் விதமாக ஏதேனும் செய்திருக்க வேண்டாமா..? மைனாரிட்டி எடப்பாடி அரசின் மக்கள் விரோதப் போக்கை தொடக்கத்திலேயே நிறுத்தியிருக்க வேண்டாமா…?
நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூகம் எனஅனைத்துத் தரப்பும் மிக அலட்சியமாக இருந்துவிட்டனர். ஓராண்டு கடந்த பின்னும் இந்த அரசுக்கு எதிராக யாரும் பெரிதாகச் செயல்படவில்லை. ஜெயலலிதாவின் அதிகாரத் தோரணை எந்த அளவுக்குப் பொதுமக்களைத் துன்புறுத்தியதோ அதற்கு இணையாகவே எடப்பாடி துன்புறுத்தினார். மத்திய பா.ஜ.க அரசுடன் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான பல சதிகளைச் செய்தார். இதில் அதிகார வெறியும் சுயநலமும் மட்டுமே நிறைந்திருந்தன. ஆனால் ஊடகங்கள் எடப்பாடி மீது அளவுக்கு அதிகமாக இரக்கம் காட்டியது வியப்பாக இருக்கிறது.
மத்திய பா.ஜ.க, கார்ப்பரேட், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் ஆதரவோடு எஞ்சிய ஆண்டுகளையும் ஆளவேண்டுமென எடப்பாடி நினைக்கிறார்.
இனிமேலும் இந்த அரசின் அநீதிப் போக்கை தடுத்து நிறுத்தாவிட்டால் நாளை எதுவும் நடக்கலாம். போராட்ட சிந்தனையற்ற அடிமைகளை உருவாக்கவே தூத்துக்குடியை இரத்தக்களமாக்கி இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உயிர்ப்பலிகளை வாங்கிய செயல், ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனமே அல்லாமல் வேறல்ல. போராட்டம் தொடங்கி பல நாள்களைக் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இறுதியில் யாரையோ மகிழ்ச்சிப்படுத்த காவல்துறை முனேடுத்த கொடும்போக்கின் பலி எண்ணிக்கை 12 இல்லை… 13 என கூடிக்கொண்டே போகிறது.
முடிவில்லாமல் தொடரப் போகிறதா இந்தப் போக்கு என்கின்ற ஏக்கத்துடன் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர் பார்த்து காத்திருக்கிறான் தமிழக வாக்காளன்.
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...