தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கராச்சி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டீன் எல்கர் 58 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், யாசிர் ஷா விக்கெட்டுகளையும் நயுமான் அலி மற்றும் ஷாயின் ஷா அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 378 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பவாட் அலாம் 109 ஓட்டங்களையும் பஹீம் அஷ்ரப் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், மஹாராஜ் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் நோட்ஜே மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 158 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 245 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 88 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்போது தென்னாபிரிக்கா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டன் மார்கிரம் 74 ஓட்டங்களையும் வெண்டர் டஸன் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நவுமான் அலி 5 விக்கெட்டுகளையும் நசிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஹசன் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 89 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது பாகிஸ்தான் அணி சார்பில், அசார் அலி ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களையும் பாபர் அசாம் 30 ஓட்டங்களையும், பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், என்ரிச் நோட்ஜே 2 விக்கெட்டுகளையும் கேசவ் மஹா ராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 245 பந்துகளில் 2 சிக்ஸர் 9 பவுண்ரிகள் அடங்களாக 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பவாட் அலாம் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ராவல்பிண்டி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.