தெளிவான காரணம் வழங்கப்பட்டால் மாத்திரமே பிரெக்ஸிற் நீடிப்பு சாத்தியம்!
In இங்கிலாந்து April 9, 2019 9:12 am GMT 0 Comments 2871 by : shiyani
பிரெக்ஸிற் நீடிப்பு ஒன்றை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதாகவும் ஆனால் வழங்கப்படும் மேலதிக நேரத்தில் முறிந்துள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எப்படி சீராக்குவது என்பது குறித்த தெளிவான திட்டமொன்றை பிரதமர் தெரேசா மே முன்வைக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவுக்கு மற்றுமொரு பிரெக்ஸிற் நீடிப்பு வழங்குவது குறித்து தீர்மானிப்பதற்காக நாளையதினம் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ள நிலையில் அந்நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று லக்ஸம்பேர்க்கில் சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் தவிர்க்கப்பட வேண்டுமென இச்சந்திப்புக்காக லக்ஸம்பேர்க் வந்தடைந்துள்ள ஜேர்மன், டச்சு, ஐரிஷ் மற்றும் லக்ஸம்பேர்க் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைவரும் பிரெக்ஸிற் நீடிப்புக்கு ஆதரவாகேவே உள்ளனர் ஆனால் நிச்சயமாக அந்த நீடிப்புடன் திட்டமொன்று இணைக்கப்பட்டிருக்க வேண்டுமென ஐரிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் கொவேனி தெரிவித்துள்ளார்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற் தவிர்க்கப்பட வேண்டுமென்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் அதற்காக பிரித்தானியாவுக்கு மேலதிக நேரம் தேவைப்பட்டால் அதை வழங்குவதற்கும் நாம் தயாராக உள்ளோம் என டச்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்டெப் ப்ளொக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான தீர்வொன்றை பிரித்தானியா காணவேண்டுமெனவும் அதற்கான திட்டமொன்றை பிரித்தானியாவிடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என லக்ஸம்பேர்க் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் அஸெல்போர்ன் கூறினார்.
தெளிவான திட்டமொன்றை முன்வைத்தால் மாத்திரமே மேலதிக பிரெக்ஸிற் நீடிப்பு சாத்தியமாகுமென ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ரோத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை அமைக்கப்பட்ட விதிமுறைகள் எதுவுமே பிரித்தானியாவால் பின்பற்றப்படவில்லையெனவும் பிரெக்ஸிற்றை இனியும் பிற்போட்டால் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் கலந்துகொள்வது உட்பட்ட கண்டிப்பான விதிமுறைகளை நிச்சயமாக பிரித்தானியா பின்பற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.