தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமைக்கு ஜனாதிபதியே காரணம் – நளின் பண்டார சாடல்
In ஆசிரியர் தெரிவு May 1, 2019 4:49 am GMT 0 Comments 2353 by : Dhackshala
நாட்டில் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமெனில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து நாம் மிகவும் கவலையடைகிறோம். யாரும் எதிர்பாராத துரதிஷ்டமான ஒரு சம்பவத்துக்குத்தான் நாம் முகம் கொடுத்துள்ளோம். இந்த சம்பவத்துக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளோம்.
இந்த சம்பவத்தில் நாம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூற முற்படவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்திற்கு உண்மையாக பொறுப்பேற்க வேண்டியவர்கள் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முயற்சித்து வருகிறார்கள்.
19ஆவது திருத்தச்சட்டத்தை மீறி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சட்டவிரோதமான பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த காலத்தின்போது, நாமல் குமார என்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிவந்தார். ஆனால், அவர் தொடர்பிலான விசாரணைகள் தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளது என்று தெரியவில்லை. நாமல் குமாரவின் நாடகத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட எதிரணியினரும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். இதனாலேயே, தன் மீதான கொலை சதிக்கு ஜனாதிபதி முக்கியத்துவம் வழங்கினாரே ஒழிய, தேசிய பாதுகாப்பு விடயத்தில் அசமந்தமாக செயற்பட்டார்.
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றாலும், அதனைக்கூட ஜனாதிபதி தனக்கு சார்பாகவே பயன்படுத்திக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சும் இதனால் பலவீனமடைந்தது. இதனை மஹிந்த உள்ளிட்ட அவரது தரப்பினரும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதனாலேயே இவ்வளவு பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.
எம்மைப் பொறுத்தவரை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும். இதனையே பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கிறார்கள். நாட்டில் தேசிய பாதுகாப்பை நாம் இன்னும் பலப்படுத்த வேண்டும். இதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தான் சரியான ஒருவராக இருப்பார்” என்றும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.