தேர்தல் ஊடாக அரசாங்கத்தை வீழ்த்துவதே இலக்கு – உதய கம்மன்பில
In இலங்கை April 6, 2019 10:17 am GMT 0 Comments 2084 by : Dhackshala
அரசாங்கத்தை தேர்தல் ஊடாக தோற்கடிப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரின் பிரதான இலக்கு என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும், தற்போதைய நிலைமையில், அரசாங்கத்தை வீழ்த்தும் பலம் தமது தரப்புக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “சிலர் எம்மிடம், ஏன் வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவில்லை என்று தற்போது கேட்கிறார்கள்.
எம்மிடம் அவ்வளவு பெரும்பான்மை இருந்திருந்தால், நாம் தற்போது எதிரணியில் இருக்கமாட்டோம். மஹிந்த ராஜபக்ஷ பிரதமரான பின்னர், 51 நாட்களிலேயே, பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினாலே நாம் எதிரணியில் அமர்ந்தோம்.
பெரும்பான்மை இருந்தால், வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய அரசாங்கமொன்றையும் ஸ்தாபித்திருப்போம்.
எவ்வாறாயினும், தேர்தல் ஊடாக இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதுதான் எமது பிரதான நோக்கமாகும்.
2019 ஒக்டோபர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க வேண்டும். அமெரிக்கா என்னதான் சொன்னாலும் நாட்டின் ஜனாதிபதியை மக்களே தீர்பானிப்பார்கள். இதற்கான சரியான பாதையை நாம் மக்களுக்கு காண்பிப்போம்.
நான் ஆரம்பத்திலிருந்தே எமக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்றே கூறிவந்தேன். கடந்த வருடம் ஒக்டோபர் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தால், இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை நான் அறிவேன். மக்களும் இதனை அறிவார்கள். 113 பெரும்பான்மை இல்லாமல் எம்மால் அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். எமக்கு தேர்தல் ஊடாக இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதே ஒரே இலக்காகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.