தேர்தல் பத்திரங்களுக்கான வழக்கின் விசாரணை – தீர்ப்புக்காக கட்சிகள் காத்திருப்பு!
In இந்தியா April 12, 2019 3:34 am GMT 0 Comments 2367 by : Yuganthini

அரசியல் கட்சிகளின் தேர்தல் நிதிக்காக அளிக்கப்படும் தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடவுள்ளது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக தேர்தல் பத்திர திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி பிரசாந்த் பூஷண் தெரிவிக்கையில், ”தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 220 கோடி ரூபாய்க்கு பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதில் 210 கோடி ரூபாய் மதிப்பு பத்திரங்கள் பா.ஜ.க.வுக்கே வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல்ஆணையம் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி ராகேஷ் திவேதி கூறுகையில், “தேர்தல் பத்திரங்களை, தேர்தல் ஆணையம் எதிர்க்கவில்லை. ஆனால் அதை கொடுத்தது யாரென தெரிவிக்க தேவையில்லை என்பதைதான் எதிர்க்கிறது.
வேட்பாளர் பற்றிய விபரங்களை, வாக்காளர்கள் அறிந்தால் மட்டும் போதாது. அந்த வேட்பாளர்களுக்கு நிதியுதவி செய்யும் கட்சிகள் குறித்தும் அறிய, வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது” என சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசு சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் கே.கே.வேணுகோபால் குறிப்பிடுகையில், “தேர்தலில் போட்டியிட, பெருமளவில் பணம் தேவைப்படுகிறது. அந்தவகையில் தேர்தலில் கறுப்பு பணம் புழக்கத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தியது. ஆகையால் இத்திட்டம் குறித்து மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் நீதிமன்றம் ஆய்வு செய்யலாம்.
தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வங்கிகள் ஊடாக கட்சிகளுக்கு நிதியளிக்கப்படுகிறது. தங்களுக்கு பிடித்த கட்சிக்குதான், அனைவரும் நிதியுதவி அளிக்கின்றனர். தேர்தலில் அக்கட்சி தோற்று, வேறு கட்சியின் ஆட்சி அமைந்தால் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்கின்றனர்.
ஆகையால்தான் நிதியளித்தவர்களின் பெயர் தெரிய வேண்டாமென கூறியுள்ளோம்” என அவர் குறிப்பிட்டார்.
இவ்விடயங்கள் அனைத்தையும் கேட்டறிந்துகொண்ட நீதிபதிகள், குறித்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என கூறி அவ்வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.