தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்
In இந்தியா February 2, 2021 3:24 am GMT 0 Comments 1281 by : Dhackshala

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
ஆளுநர் ஆங்கிலத்தில் ஆற்றும் உரையைப் பேரவைத்தலைவர் தனபால் தமிழில் வாசிப்பார். அதைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர், அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.
கூட்டத் தொடரின்போது, ஒவ்வொரு நாளும் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்று, இறுதியாக விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார்.
பேரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேநேரம், பேரவைக் கூட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ்களுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
மேலும் பேரவைக்கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.