தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது – ஸ்ரீதரன்
In ஆசிரியர் தெரிவு February 14, 2021 4:39 am GMT 0 Comments 1638 by : Dhackshala

தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது என்றும் தமிழர்களே இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நாம் இந்த மண்ணிலே நாளுக்கு நாள் வெவ்வேறான பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். பொழுது விடிவதே எங்கள் மக்களின் நிலங்களையும் வாழ்வையும் அரச இயந்திரங்கள் கபளீகரம் செய்கின்ற செய்திகளுடனேதான்.
தொல்லியல் என்ற பெயரில் எங்கள் தொன்மங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சிவலிங்க வழிபாடு மேற்கொண்ட இடங்களை எல்லாம் புத்தர் சிலை இருந்தது எனக் கூறி எங்கள் வழிபாட்டு உரிமையை கேள்விக்கு உள்ளாக்குகின்றது.
எங்கள் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் நவநாகரிகம் என்ற பெயரில் இல்லாமல் போகிறது.
இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிறார்கள். இலங்கை நாட்டின் முப்படைகளும் ஆயுதங்களோடு வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து வைத்திருக்கின்றார்கள்.
எந்த இடத்திலும் இல்லாதவாறு தமிழர்களின் இடங்களில் ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் எவ்வாறு போதைப்பொருள் எமது இளைஞர்களுக்கு கிடைக்கிறது. எங்கள் இளைஞர்களின் சிந்தனையை இனம் பற்றி சிந்திக்க கூடாது என்ற நோக்கில் எங்கள் இளைஞர்களை வேறு திசைகளுக்கு திருப்புகின்ற செயற்பாடுகள் கனகச்சிதமாக திட்டமிட்டு செய்யப்படுகிறது.
இலங்கைக்கு பௌத்த மதம் என்பது தேவநம்பியதீசன் காலத்திலேதான் வந்தது. அதற்கு முன்னர் இங்கு இராவணன் என்ற சிவபக்தன் இந்த இலங்கையை ஆண்டிருக்கிறார்.
தேவநம்பியதீசன் காலத்திற்கு முன்பாக ஆண்ட மன்னர்கள் எல்லோரும் இந்துப் பண்பாட்டுடன்தான் ஆண்டிருக்கிறார்கள்.
தமிழ் மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டார்கள் என்பதைக்கூட பாடப்புத்தகங்களில் இணைக்க சிங்கள கல்வித் துறை தயாராக இல்லை பண்டாரவன்னியன், கையிலை வன்னியன், சங்கிலியன், பல்லவன், அக்கிராசன் போன்ற மன்னர்கள் ஆண்டார்கள் என்பதைக்கூட வரலாற்றுப் புத்தகத்தில் போடுவதற்கு தயாராக இல்லை.
இதனால்தான் தலைவர் பிரபாகரன் தமிழீழ கல்வி கழகத்தின் பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியம் ஊடாக தமிழீழ வரலாறு என்னும் பாடம் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது.
சிவவழிபாடு மிகச்சிறந்த முறையில் இங்கு நடை பெற்றிருக்கிறது என்பது திருமூலர் இலங்கையை சிவபூமி என்று அழைப்பதன் மூலமே தெளிவாகிறது.
தேவநம்பிய தீசனின் தந்தையின் பெயர்கூட மூத்த சிவன் என்பதுதான். சிவன் என்பது தமிழர்களின் கடவுளின் பெயரையே குறிக்கிறது.
தீசன் சிவன் போன்ற பெயர்கள் இப்போதும் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நாட்டினுடைய வரலாறு எவ்வாறு திரிபுபடுத்தப்படுகிறது என்பது இதில் இருந்தே தெளிவாகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.