தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகம் – சுதர்ஷனி
In இலங்கை January 26, 2021 10:05 am GMT 0 Comments 1609 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளன என கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
எனவே அவை தொடர்பில் கண்டறிந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய வழிமுறையொன்று நிருவப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதுள்ள நிலைமையை மேலும் சீராக்குவதற்கு உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு எவ்வித அறிகுறிகளும் இன்றி தொற்றுடன் இனங்காணப்படுபவர்களை முதல் 10 நாட்கள் சிகிச்சை நிலையங்களிலும் இறுதி 4 நாட்கள் வீடுகளிலும் மருத்துவ கண்காணிப்பில் வைப்பது தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா கட்டுப்படுத்தலுக்காக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பரிசோதனைகள், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் காலம், தனிமைப்படுத்தல் வழிமுறைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்கு அமைய அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.