தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும் – மஸ்கெலியாவில் போராட்டம்
In இலங்கை January 6, 2021 5:16 am GMT 0 Comments 1473 by : Dhackshala
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியா நகரில் இன்று (புதன்கிழமை) முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்துக்கு மலையக சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தன.
தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களை பின்பற்றி நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புபட்டி அணிந்திருந்ததுடன், தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.
அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை இம்முறையும் ஏமாற்றுவதற்கு முற்பட்டால் போராட்டம் வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட போராட்டக்காரர்கள், “மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்ற கோரிக்கை 2014ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.
தற்போது 6 வருடங்கள் கடந்துள்ளன. இக்காலப்பகுதியில் பொருட்களின் விலை அதிகரித்து, வாழ்க்கைச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே எவ்வித நிபந்தனையுமின்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும்.
அதேபோல 25 நாட்கள் வேலை வழங்கப்படுவதையும் தோட்டக் கம்பனிகள் உறுதிசெய்யவேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் காத்திரமான தலையீடுகள் அவசியம்” என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.