அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது மக்களை எவ்விதத்திலும் அவை பாதிக்கக்கூடாது என்பது பொதுப்படை.
ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்;கு குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் இடம்பெறவே செய்கின்றன.
அந்தவகையில், முல்லைத்தீவில் வீதிக்கு நடுவே பாதுகாப்பு மின்கம்பி போடப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.
முல்லைத்தீவு முறிகண்டி முனியப்பர் வீதியின் நடுப்பகுதியில் மின்கம்ப பாதுகாப்பு கம்பி காணப்படுவதால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஏ9 வீதியிலிருந்து மக்கள் குடியிருப்புக்களுக்கு செல்லும் வீதியே இது.
யுத்தத்தின் தாக்கத்திற்கு பெருமளவில் முகங்கொடுத்த இம்மக்கள், நீண்ட காலத்தின் பின்னர் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.
மீள்குடியேற்றத்தின்போது குறித்த வீதியின் நடுப்பகுதியில் இவ்வாறு மின்கம்பத்தை பாதுகாக்கும் கம்பி பொருத்தப்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கம்பியை அகற்றி போக்குவரத்திற்கு இலகுபடுத்தி தருமாறு பலமுறை மக்கள் மின்சார சபையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 11.01.2019 அன்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் இவ்வாறு கடிதம் ஒன்றின் மூலமும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதிகாரிகள் குறித்த கம்பியை அகற்றி மக்களுக்கு இலகுபடுத்தலை மேற்கொண்டு கொடுக்கவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் போது, மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினுடைய கடமை என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் வலியுறுத்துகின்றது.