நண்பர்களை இழக்கத் தொடங்கும் அரசாங்கம்- இந்த ஆண்டு அரசாங்கத்துக்குச் சோதனை காலமா?
January 5, 2021 9:30 pm GMT

முகநூலில் ஒரு குறிப்பைக் கண்டேன்! அதை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெயரோடிருந்தார். அந்தக் குறிப்பில் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உள்ளதென வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
‘காலையில் எழுந்ததும் பல் விளக்கி, வாயைக் கொப்பளித்து முகம் கழுவிய பின்னர் தேநீர் அருந்தக்கூடாது. பதிலாக இரண்டு துளி கருஞ்சீரக எண்ணையை தொண்டைக்குள் விட்ட பின்னர் சிறிது நேரம் கழித்து அதை சுடுதண்ணீர் விட்டு கொப்பளித்தால் சரி. இவ்வாறு செய்த பின்னர் பி.சி.ஆர். பரிசோதனை எடுக்கப் போனால் அங்கே தொற்று உள்ளதென காட்டாது’ என்று அந்தக் குறிப்பில் இருந்தது.
அது உண்மையோ, பொய்யோ எனக்குத் தெரியாது. ஆனால், கொழும்பில் வசிக்கும், நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ள எனது நண்பர் ஒருவர், ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
தனது நண்பர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் பி..சி.ஆர். பரிசோதனை செய்வதற்குபப் பயப்படுகிறார்கள் என்று. ஏனெனில், ஒரு கொவிட்-19 நோயாளியாக இறக்க இலங்கை முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள். அவர்கள் சாவைப் பற்றிக் கவலைப்படுவதை விடவும் சாவுக்குப் பின்னர் தமது உடலுக்கு என்ன நடக்கும் என்றே அச்சப்படுகிறார்களாம்.
இலங்கை முஸ்லிம் ஒருவர் கொவிட்-19 தொற்றினால் இறந்தால் அவருடைய உடல் அவருடைய குடும்பத்துக்குச் சொந்தமில்லை. அவர் பின்பற்றும் மார்க்கத்துக்கும் சொந்தமில்லை. மாறாக அது அரசாங்கத்தின் உடல். தனது உடலை தனது மார்க்க நம்பிக்கைகளின்படி அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்காது. எனவே, இறந்தபின்னர், தமது உடலுக்கு உரிய மதிப்பு கிடைக்காது என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இறந்த பின்னர் தமது உடலுக்கு என்ன நடக்குமோ என்று ஒரு சமூகம் அஞ்சுவது ஒரு பயங்கரமான நிலை.
இந்த அச்சம் காரணமாக முஸ்லிம் சமூகம் இப்பொழுது எதிர்ப்புக் காட்டத் தொடங்கியிருக்கிறது. கபன் துணிப் போராட்டம் அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வந்துவிட்டது. அதுவொரு பெருந்திரள் போராட்டமாக மாறுவதில் அடிப்படையான வரையறைகள் இருக்கும். ஏனெனில், நோய் தொற்றுச் சூழல் காரணமாக பெருந்திரள் மக்கள் போராட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதிக்காது. எனினும், கடந்த சில வாரங்களாக முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு காட்டத் தொடங்கிவிட்டார்கள். முஸ்லிம்களோடு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தமிழ் தேசியக் கட்சிகளும் ஒரு தொகுதி கிறிஸ்தவ மதகுருக்களும் நிற்கிறார்கள்.
அரசாங்கம் இதுவிடயத்தில் முஸ்லிம்களின் சவ அடக்க உரிமையை அதாவது, பண்பாட்டு உரிமையை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. ஏனெனில், அதற்கு சுகாதாரக் காரணங்களை விடவும் அரசியல் காரணங்கள் அதிகம் உண்டு. அதாவது, கொவிட்-19இன் விளைவாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார விளைவுகள், சமூக நெருக்கடிகள், அதிருப்தி, ஏமாற்றம், கோபம் போன்றவற்றை திசை திருப்புவதற்கு ஜனாசா அடக்க விவகாரம் அவர்களுக்குத் தேவை.
அதன்மூலம் அரசாங்கத்துக்கு எதிராகத் திரளக்கூடிய சிங்கள-பௌத்த உணர்வலைகளை சிறிய தேசிய இனமாகிய முஸ்லிம்களுக்கு எதிராக மடைமாற்றி விடலாம். அல்லது சிங்கள மக்களின் அதிருப்தியை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி விடுவதன் மூலம் கொவிட்-19இன் கெட்ட விளைவுகளின் மீது சிங்கள மக்களின் கவனம் குவிவதைத் தடுக்கலாம்.
அரசாங்கம் கொவிட்-19 சூழலைக் கையாள்வதில் திணறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த எல்லா மாவட்டங்களுக்கும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கென்று படை அதிகாரிகளை அரசாங்கம் நியமித்திருக்கிறது.
ஏற்கனவே, நாடு முழுவதற்கும் கொவிட்-19இற்கு எதிரான நடவடிக்கைச் செயலணிக்கு நாட்டின் படைத்தளபதிதான் பொறுப்பாக இருக்கிறார். தொலைக்காட்சிகளில் நடக்கும் நோய்தொற்று தொடர்பான விவாதங்களிலும் படை அதிகாரிகள்தான் அதிகமாகப் பங்குபற்றுகிறார்கள். நோய்த்தொற்றுச் சூழலை வைத்து உலகில் அதிகம் படை மயப்படுத்தபட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை தீவு காணப்படுகிறது.
ஒருபுறம் இலங்கை இரண்டு சிறிய தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் பின்னணியில் நாட்டை முன்னெப்பொழுதையும் விட அதிகரித்த அளவில் படைமயப்படுத்துகிறது.
ஜனாசா எரிப்பு விவகாரம் தீர்க்கப்படக் கூடியது. உலகில் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றிலும் கொவிட்-19 தொற்றினால் இறந்தவரின் உடல் புதைக்கப்படுகிறது. இலங்கையில் மட்டும் அதைப் புதைத்தால் நோய் பரவும் என்ற விளக்கம் விஞ்ஞான பூர்வமானதாகத் தெரியவில்லை.
கொவிட்-19ஐ விடவும் உலகில் அதிகம் சேதத்தை ஏற்படுத்தியது எபோலா வைரஸ். எபோலா வைரஸ் ஆபிரிக்காவை அதிகம் பாதித்தது. வௌவால்களில் இருந்து அது பரவியது. அது தும்மல், வியர்வை, சிறுநீர், மலம், தாய்ப்பால், விந்து, எச்சில் போன்ற எல்லாவற்றின் மூலமும் பரவக் கூடியது. இறந்த உடலில் நீண்ட காலம் உயிருடன் இருக்கக் கூடியது. அப்படிப்பட்ட தொற்று வாய்ப்பு அதிகமுடைய எபோலா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களின் உடலைக்கூட புதைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியது.
எனவே, கொவிட்-19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதால் வைரஸ் பரவும் என்ற வாதம் ஏற்புடையதல்ல, அறிவுபூர்வமானது அல்ல, விஞ்ஞான பூர்வமானது அல்ல, உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அல்ல. எனினும் அரசாங்கம் தனது நடைமுறையை மாற்றத் தயாரில்லை.
ஒரு நோய்தொற்று சூழலைக் காரணமாக வைத்து சிறிய தேசிய இனங்களுக்கு எதிரான பெரிய தேசிய இனத்தின் உணர்வலைகளை அரசாங்கம் குவிக்கின்றது. இவ்வாறு ஒன்றுகுவிப்பதால் கொவிட்-19 சூழலால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பலாம் என்று அரசாங்கம் நம்புகின்றதா?
மஞ்சள் இறக்குமதியை நிறுத்துவதற்கு முன்னர் அரசாங்கம் உள்நாட்டில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து யோசித்திருந்திருக்க வேண்டும். தமிழ் மக்களை விடவும் அதிகரித்த அளவில் சிங்கள மக்களே மஞ்சளைப் பயன்படுத்துகிறார்கள். இலங்கை தீவில் மஞ்சள் இல்லாத ஒரு சமையலறையைக் கற்பனை செய்வது கடினம்.
இந்நிலையில், மஞ்சள் உற்பத்தியை உள்நாட்டில் அதிகப்படுத்தாமல் என்ன துணிச்சலில் அரசாங்கம் மஞ்சள் இறக்குமதியை நிறுத்தியது? அது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஒரு அதிரடி நடவடிக்கை என்று கூறிக்கொண்டாலும் மஞ்சளின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் இன்றுவரை முடியவில்லை.
மஞ்சள் விலை மட்டுமல்லாது பலதுறைகளிலும் கொவிட்-19இன் விளைவாக ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சீர்செய்ய அரசாங்கத்தால் முடியவில்லை. இதனால், நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய அதிருப்தியை, கோபத்தைத் திசை திருப்புவதற்கு ஜனாஸா விவகாரம் தொடர்ந்தும் சூடான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறதா?
இந்த ஊகம் சரியாக இருந்தால் அடுத்த ஜெனிவாவை நோக்கியும் அரசாங்கம் அவ்வாறு சிங்கள-பௌத்த உணர்வலைகளை உருவேற்றக்கூடும். அவ்வாறு தூண்டுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்திற்கு வழங்கிய இணையனுசரனையில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறது.
அதேசமயம் தமிழ்தரப்பு ஒரு புதிய இறுக்கமான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்கின்றது. இதனிடையே அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் ஜெனிவா விடயத்தில் அமெரிக்கா அதிகரித்த அளவில் தலையீடு செய்யக்கூடிய வாய்ப்புக்களை அதிகப்படுத்தியுள்ளது.
அரசாங்கம் அமெரிக்காவுடன் மில்லேனியம் சலேஞ்ச் உடன்படிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டது. இதனால், அமெரிக்கா சில கிழமைகளுக்கு முன்னர் அந்த உதவித் திட்டத்தை பின்னெடுத்துவிட்டது.
இதைப்போலவே கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிக்கும் வேலைகளை இந்திய நிறுவனமாகிய அதானி குழுமத்திடம் வழங்கப்போவதாக அரசாங்கம் முன்பு வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்றுவரையிலும் அவ்வாறு செய்யவில்லை.
இவ்வாறு, அரசாங்கம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உவப்பில்லாத நகர்வுகளை முன்னெடுப்பதனால் இவ்விரு நாடுகளும் ஏனைய மேற்கு நாடுகளும் இணைந்து இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு எதிராக இறுக்கமான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரக்கூடும் என்று ஒரு எதிர்பார்ப்பு ஒரு பகுதி தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது.
அதேசமயம், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன வரும் ஜெனிவா கூட்டத்தொடரை கையாளுவது கடினமாக இருக்கலாம் என்ற தொனிப்பட கருத்துத் தெரிவித்ததாகவும் ஜெனிவாவை தன்னால் எதிர்கொள்ள முடியாது என்ற தொனிப்பட்டக் கூறியதாகவும் ஒரு தகவல் உண்டு. எனவே, இம்முறை ஜெனீவா விடயம் அரசாங்கத்துக்கு நெருக்கடியாக அமையக்கூடும் என்ற கணிப்பு தமிழ் அமைப்புக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இருக்கலாம். ஆனால், அப்படியொரு தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு சிங்கள பௌத்த உணர்வலைகளைத் திரட்டத் தேவையான வாய்ப்புக்கள் அரசாங்கத்துக்குக் கிடைக்கும். அவ்வாறு சிங்கள-பௌத்த உணர்வுகளை உருவேற்றுவதன் மூலம் அவர்கள் கொவிட்-19இன் தீய விளைவுகளிலிருந்து சிங்கள-பௌத்த வாக்காளர்களைத் திசைதிருப்ப முடியும்.
அண்மையில், இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவராகிய முத்தேட்டுவ ஆனந்த் தேரார் பின்வருமாறு கூறியிருக்கிறார், “இந்த அரசாங்கத்தின் ஆலோசகர்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கமால் தங்களின் பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனமாக உள்ளார்கள்.
நாட்டின் வருமானம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் மக்களைச் சென்று சந்திப்பதில்லை. நான் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தவில்லை. ஆனாலும், இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், மக்கள் படும் துயரங்கள் பற்றிக் கவலை கொண்டுள்ளேன். எனவே, அரசாங்கம் உடனடியாக அமைச்சரவையை மாற்றி புதிய அமைச்சரவையை உருவாக்கி புதிய அரச நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது எதைக் காட்டுகிறது? அரசாங்கம் அதன் நண்பர்களை இழக்கத் தொடங்கிவிட்டது என்பதையா? இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு அதிகம் சோதனை மிகுந்த ஆண்டாகவே இருக்குமா? அல்லது கொவிட்-19இன் தீய விளைவுகளின் மீதான சிங்கள, பௌத்த பெரும்பான்மையின் கவனக் குவிவைத் திசை திருப்ப ஜனாஸா எரிப்பும் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரும் அரசாங்கத்துக்கு உதவுமா?

-
உள்நோக்கங்களால் பிசுபிசுத்துப் போகும் ஐ.நா. தீர்மானம்! – தமிழர்கள் பேர பலத்தை அதிகரிப்பதே ஒரே வழி!!
இலங்கை அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு ம...
-
தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு: உடனடியாகச் செய்யவேண்டிய காரியம்..
தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இணைந்து ...