கல்முனையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் – வைத்தியர் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தலில்
In இலங்கை December 8, 2020 10:05 am GMT 0 Comments 1445 by : Dhackshala

கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர் தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு கடமையாற்றிய வைத்தியரும் பிசிஆர் மாதிரி பெறப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 தொற்றாளர் தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றிருந்த நிலையில், அங்கு கடமையாற்றிய வைத்தியரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடன் குறித்த தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றிய ஏனைய உத்தியோகத்தர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பரிசோதனை கிடைக்கப்பெறும் பட்சத்தில்தான் சாதாரண நடைமுறையில் விடுவதா அல்லது தனிமைப்படுத்தலை நீடிப்பதா என்பதை தீர்மானிக்க முடியும்.
கல்முனை வடக்கு நற்பிட்டிமுனையில் கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் அக்கரைப்பற்று நீர்பாசன இலாக்காவில் பணியாற்றுபவர்.
இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டவர் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினுள் முதலாவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது தொடர்பாடலில் 50 பேரை இனங்கண்டு பி.சி.ஆர் பரிசோதனை எடுத்துள்ளோம். இதுவரை முடிவுகள் கிடைக்கவில்லை. கிடைக்கும் பட்சத்தில் மேலதிக தகவல்கள் தரப்படும்.மேற்கூறிய நபர்கள் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.