நல்லிணக்கத்தின் ஊடாகவே கொடூரமான சம்பவங்களை தடுக்க முடியும் – மன்னார் ஆயர்
எங்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம் இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் ஓரளவு நிம்மதியும் அமைதியும் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு வாழும் தருணத்தில் இந்த கொடூரமான பயங்கரவாத சம்பவம் இடம்பெற்றுள்ளது என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் இன்று (வெளிக்கிழமை) கரித்தாஸ் வாழ்வுதய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்தின் இயக்குநர் அருட்தந்தை லக் கோன்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு முன்னர் நுழைவாயிலில் இருந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் சர்வமத பிரதிநிதிகள் பணியாளர்கள் அனைவரும் கருப்பக்கொடியை ஏந்தியவாறு குறித்த மண்டபம் வரை சென்றனர். பின்னர் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் மன்னார் மறைமாவட்ட ஆயர்இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உரையாற்றுகையில்,
“நம்பிக்கையோடு உயிர்த்த ஆண்டவரின் விழாவைக் கொண்டாட வந்திருந்த அந்த வேளையில் உயிர்களை அவர்கள் தியாகமாக கொடுக்கவேண்டி நேரிட்டது.
அது எங்கள் அனைவரையும் பாதீத்துள்ளது. இந்த அசம்பாவிதத்தினால் இன்றும் எங்கள் மனங்கள் துயருடனும், பயத்துடனும் இருக்கின்றன.
நாட்டில் ஓரளவு நிம்மதியும் அமைதியும் இருக்கின்றது என்று நாங்கள் நினைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கையில் இப்படியான ஒரு கொடூரமான பயங்கரவாத செயற்பாட்டினால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற போது அவ்விடங்களில் இருந்தவர்களுடைய கதைகளை கேட்கின்ற போது மிகவும் வேதனை ஏற்படுகின்றது.
இப்படி ஒரு சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது, எமது நாட்டின் பாதுகாப்பு போதமையினாலா அல்லது மக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோதமாக செல்வதினாலா? என்று தெரியவில்லை.
நாங்கள் ஒன்று கூடி வாழ வேண்டும். ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டும். நாங்கள் அனைவரும் மற்றவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றவர்களாகவும், வெவ்வேறு மதங்களில் இருப்பவர்களாகவும் வாழுகின்றோம். எங்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம் இருப்பது மிகவும் அவசியமாகும். எப்படி ஒருவர் மற்றவரை மதித்து வாழ்கின்றோமோ அங்கே தான் நாங்கள் அமைதியை காண்கின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.