நள்ளிரவில் இளம் பெண் கடத்தப்பட்டார்! – கடத்தியது முக்கிய கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட குழுவாம்!

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்ற குறித்தகுழு, வீட்டை உடைத்து, நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஜுனியர் வீதியில், இரு பெண் பிள்ளைகள் உள்ள ஒரு வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளைவான் ஒன்றில் நான்கு பேர்கொண்ட குழுவுடன் வந்த, நாடாளுமன்ற வேட்பாளரான நா.விஸ்ணுகாந்தன், வீட்டின் வெளிக்கதவின் பூட்டினை உடைத்து, வாசல் கதவையும் உடைத்து உள்நுழைந்ததுடன், வீட்டின் உரிமையாளரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர், இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் எனவும், அவருக்கு திருமணம் முடித்து மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.