நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
2020 நவம்பர் 23ஆம் திகதியளவில் தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மையப் பகுதிகளில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
அது தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் வட கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து தொடர்ந்து வரும் நாட்களில் அறிவுறுத்தப்படுவார்கள்.
காற்று : மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கொழும்பிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.
கொழும்பிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.