நாட்டின் சிவில் நிர்வாகம் முழுமையான இராணுவமயமாகின்றது -ஹக்கீம்
In இலங்கை January 3, 2021 4:37 am GMT 0 Comments 1587 by : Dhackshala
நாட்டின் சிவில் நிர்வாகத்துறையானது முழுமையான இராணுவமயமாகின்ற நிலையில் சென்றுகொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத்துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர்ந்த வெளிவிவகாரம், சுகாதரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ்விதமான படை அதிகாரிகள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் என்று பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருதமுடியும்.
அதற்காக, சிவில் நிர்வாகத்தில் மேலும் மேலும் படை அதிகரிகளை இணைத்துக்கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிர்வாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாகவுள்ளது.
விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமயிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும் அதன்பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமித்தமை தற்போது மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.
விசேடமாக, கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கருத்திற்கொள்ளப்படாது தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் தமக்கான அடிப்படை உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெகுஜனப் போராட்டங்கள் வாயிலாக ஆதங்கங்கள் நாடளாவிய ரீதியில் வெளிக்கிளம்பியுள்ளன.
இத்தகையதொரு சூழலில் மாவட்ட ரீதியாக கொரோனா விடயங்களை கையாள்வதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளமையானது அவர்களின் நியாயமான கோரிக்கையை இராணுவத்தினைப் பயன்படுத்தி அடக்குமுறை ஊடாக முடிவுக்கு கொண்டுவருதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டியது அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.