நுண்கடன்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மஹிந்த
In ஆசிரியர் தெரிவு April 4, 2019 9:30 am GMT 0 Comments 2803 by : Benitlas
அப்பாவி மக்கள் பெற்றுக்கொண்ட நுண்கடன்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
நிலையியற் கட்டளை, 27 இன் கீழ் நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கிராம மக்களின் அவசர தேவைக்காகவே, இந்த நுண்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கடனைப் பெற்றுக்கொள்ள நம்பிக்கை மட்டுமன்றி, அப்பாவி மக்களின் சொத்துக்களும் அடமானம் செய்யப்பட்டன.
மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களையும், பெண்கள் தையல் இயந்திரத்தையும், விவசாயிகள் நீர் இறைக்கும் இயந்திரம் என அனைத்தையும் அடகுவைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இவ்வாறு பல சிக்கல்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட இந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமையும் பயனாளிகளுக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. நுண்கடனை பெற்றுக்கொண்டவர்களுக்கான கடன் இரத்து செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளபோதும், இதுவரை அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆனால், இந்த விடயத்தில் இன்னொரு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடனில் வட்டி வீதம் அதிகரித்துள்ளதோடு, பயனாளிகள் மிரட்டப்படுகின்றமையும், பல்வேறு வழிகளில் லஞ்சம் கொடுக்க நேரிடுகின்றமையும் இவ்விடயத்தில் பாரிய விளைவாகக் காணப்படுகின்றது.
பதிவு செய்யப்பட்ட கம்பனிகளுக்கு அப்பால், சில பாதாளக் குழுவினரால் மேற்கொள்ளப்படும் கடன் வழங்கும் திட்டத்தால், அப்பாவி மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.
கடன் வழங்குவதற்காக வங்கிகளில் கோரப்படும் விடயங்கள் அடித்தட்டு மக்களிடம் இருப்பதில்லை. அவர்களுக்கு உரிய சொத்துக்கள் கூட இல்லாமல்தான் இருக்கிறது.
இதனாலேயே, அவர்கள் பாதாளக் குழுவினர் உள்ளிட்ட தரப்பினரால் வழங்கப்படும் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்குத்தள்ளப்படுகிறார்கள்.
எனவே, தான் இவ்வாறானவர்களின் நுண்கடன்களை இரத்து செய்யுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.