நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி
In இலங்கை February 2, 2021 8:14 am GMT 0 Comments 1508 by : Dhackshala

வடக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களில் வாழும் கடன்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கான நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்வேறு நுண் நிதிக் கடன் முறைகள் மூலம் கடன்களைப் பெற்று கடன்பிடியில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட கிராமிய மக்களை குறித்த கடன் பொறியிலிருந்து விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வட்டி வீதத்துடன் கூடிய இலகு கடன் வழங்கல் திட்டம் வடமாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களின் 06 மாவட்டச் செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது வடமாகாணத்திற்காக 292 மில்லியன்களும் வடமத்திய மாகாணத்திற்காக 250 மில்லியன்களும் அடங்கலாக மொத்தம் 542 மில்லியன்கள் குறித்த கடனுதவி திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த நிதி சுழற்சி முறை நிதியாகவும் பயன்படுகின்றது.
கடன் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு சலுகை வழங்குவதற்காக குறித்த சுழற்சி முறை நிதியைப் பயன்படுத்தி கடனுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதன்கீழ் தற்போது வழங்கப்பட்டுவரும் அதிகபட்ச கடன் தொகையை 100,00 ரூபாய் வரைக்கும் அதிகரிப்பதற்கும் குறித்த கடன்களுக்கான வருடாந்த வட்டி வீதத்தை 9 வீதத்திலிருந்து 6வீதம் வரை குறைப்பதற்கும் பிரதமரினால் யோசனை முன்வைக்கப்பட் நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.