நுவரெலியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
In இலங்கை November 28, 2020 10:15 am GMT 0 Comments 1377 by : Yuganthini
நுவரெலியா- கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (சனிக்கிழமை) காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த அனைவரையும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி பத்தனை- கிறேக்கிலி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு-தெமட்டகொடை பகுதியில் இருந்து கடந்த 16ஆம் திகதியே இவர்கள் ஊருக்கு வந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26ஆம் திகதி பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று கொட்டகலை, வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆணொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கொழும்பு-கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து வந்துள்ளார்.
கொழும்பு- கிரிபத்கொடை பகுதியில் இருந்து தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூசா பிரிவிலுள்ள வீட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கொழும்பில் இருந்து எவராவது வந்திருந்தால், தகவல்களை மறைக்காமல் அதனை உரிய தரப்பினருக்கு வழங்குமாறு கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிராசாந்த், கொட்டகலை பிரதேச சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.