நுவரெலியாவில் 208பேருக்கு கொரோனா: பல பகுதிகள் முடக்கம்
In இலங்கை December 6, 2020 11:16 am GMT 0 Comments 1578 by : Yuganthini

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை, 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 4 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் சுமார் 311 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நுவரெலியா மாவட்டத்தில் ஹற்றன், வெளிஓயா தோட்டத்தில் தண்டுகள பிரிவு, பொகவந்தலாவ பொகவன பகுதியில் குயினா தோட்டம், கினிகத்தேனை பிளக்ஹோட்டர் தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையின் போது நுவரெலியா மாவட்டத்துக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஓரிரு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அதுவும் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக தோட்டப்பகுதிகளில் வைரஸ் பரவவில்லை.
எனினும், 2ஆது அலையான பேலியகொட கொத்தணி ஊடாக மீன்வாங்க சென்ற பலருக்கு வைரஸ் தொற்றியது. இதன்மூலம் தோட்டப்பகுதிகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் தீபாவளி பண்டிகைக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஊடாக தற்போது வைரஸ் பரவி வருகின்றது.
அதேவேளை முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளைக் கழுவுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் மக்கள் பின்பற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.