நெருக்கடிகளை வெற்றிகொண்டு அரசாங்கத்தை கைப்பற்றுவோம் – மஹிந்த
In ஆசிரியர் தெரிவு May 2, 2019 3:18 am GMT 0 Comments 2285 by : Dhackshala
நாட்டில் எத்தகைய நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிகொண்டு அரசாங்கத்தை கைப்பற்றுவோமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மே தின கூட்டம் நேற்று (புதன்கிழமை) கோட்டை நகரசபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரைலயாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தொழிலாளர்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்திலிருந்து அக்கரை கொள்ளவில்லை. இவர்கள் மேற்கத்தேய தொழிற்கலாசாரத்திற்கு அடிபணிந்து செய்ற்படுவதே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது கொள்கையற்ற அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
அரச தலைவர்களுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை இன்று சர்வதேச பயங்கரவாதம் நாட்டுக்குள் ஊடுருவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் வீழ்ச்சியடைந்துள்ளமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்திய புலனாய்வு பிரிவினர் தாக்குதல்கள் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தபோதிலும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இதன் பின்னணியில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது தமது இயலாமையை மறைக்க பிறர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான வழிகளை அரசாங்கம் தேடுகிறது.
பயங்கரவாதத்தை வெற்றிகொள்ள எமது புலனாய்வு பிரிவினருக்கும் இராணுவத்தினருக்கும் வல்லமை காணப்படுகிறது. சர்வதேசத்தின் உதவியை கோருவது நிலைமையினை மேலும் பாரதூரப்படுத்தும்.
அரசாங்கம் தற்போதாவது தேசிய பாதுகாப்பு பிரிவினரை பலப்படுத்த வேண்டும். எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வாகும். ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளையும் வெற்றிகொண்டு தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். அனைத்து இன மக்களும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.
எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை நிச்சயம் கைப்பற்ற முடியும் ஆட்சி மாற்றத்தையே தற்போது அனைவரும் விரும்புகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.