நோட்ரே – டாம் தேவலாயத்தை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாப்பரசர் நன்றி தெரிவிப்பு

பிரான்ஸின் பாரம்பரிய சின்னமான நோட்ரே டாம் தேவலாயத்தை தீ விபத்திலிருந்து மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு புனித பாப்பரசர் பிரான்சிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செயின்ட் பீற்றர் சதுக்கத்தில் பாப்பரசர் பிரான்ஸிஸ் பேசும்போது, ”நோட்ரே டாம் தேவலாய தீ விபத்தானது மிகுந்த வருந்தத்தக்க நிகழ்வாகும். தேவாலயத்தின் கூரை எரிந்தது போன்ற நிகழ்வுகளால் நான் அதிர்ச்சியடைந்தேன்.
தங்கள் உயிரைப் பணயம் வைத்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான 850 ஆண்டு பழமையான நோட்ரே டாம் தேவாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், அருகில் இருக்கும் தேவாலயங்களும் தொடர்ந்து மணிகளை ஒலிக்கவிட்டு உதவிக்கு வரக் கோரின. இந்தத் தீ விபத்தில் தேவாலயத்தின் மரத்திலான முக்கிய கூரை எரிந்தது.
பல மணிநேர போராட்டங்களுக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் தேவாலயத்தின் தீயை அணைத்ததுடன், அதிலிருந்த பாரம்பரியப் பொருட்களையும் பத்திரமாக மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.