நோட்ரே டாம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படும் : மக்ரோன்
தீயால் சேதமடைந்த நோட்ரே டாம் தேவாலயம் ஐந்து ஆண்டுகளுக்குள் புனரமைக்கப்படுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
தொலைக்காட்சி ஊடாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
தமது நாட்டின் தேசிய சின்னமாக விளங்கும் குறித்த தேவாலயத்தை கட்டியெழுப்ப நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, தேவாலயத்தை புனரமைப்பதற்காக நிதிவழங்க முன்வந்தோர் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்ட பொலிஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருக்கு மக்ரோன் தனது உரையில் நன்றி தெரிவித்தார்.
12ஆம் நூற்றாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த நோர்டே டாம் தேவாலயம் நேற்று முன்தினம் தீ விபத்திற்குள்ளானது. சுமார் 500 தீயணைப்பு படையினரின் கடும்போராட்டத்தின் பின்னர், அங்குள்ள அரிய கலைப்படைப்புகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. 14 மணித்தியாலங்களுக்கு பின்னரே தீ முற்றாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை, யெலோ வெஸ்ட் போராட்டத்தால் ஒரு மாத காலமாக பிற்போடப்பட்ட ஜனாதிபதி மக்ரோனின் தொலைக்காட்சி உரை நேற்று முன்தினம் இடம்பெறவிருந்தது. இந்நிலையில், தீ ஏற்பட்டதால் தொலைக்காட்சி உரையை ரத்துச்செய்து அங்கு சென்ற மக்ரோன், தேவாலயத்தை மீளக்கட்டியெழுப்புவோம் என உறுதியளித்தார். அதன் பின்னர் அவரது தொலைக்காட்சி உரை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.