பகுத்தறியும் ஆற்றலை இழக்கும் அவலம்!
In சிறப்புக் கட்டுரைகள் March 16, 2018 8:35 am GMT 0 Comments 2969 by : Arun Arokianathan
மனிதர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்துகின்ற விடயங்களில் சரி, பிழைகளை ஆராய்ந்து தீர்மானமெடுக்கின்ற பகுத்தறிவு முக்கியத்துவம் மிக்கது. ஆனால், இலங்கையில் அண்மைக்காலமாக மக்கள் நடந்துகொள்கின்ற விதத்தைப் பார்க்கின்றபோது பகுத்தறியும் ஆற்றலை இங்குள்ளவர்கள் இழந்துவருகின்றனரா என எண்ணத்தோன்றுகின்றது.
அம்பாறையில் கடந்த மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைக்கு மூல காரணமாக முஸ்லிம்கள் தமது சாப்பாட்டுக்கடைகளில் மலட்டுத்தன்மையை உண்டுபண்ணும் கருத்தடை மாத்திரைகளைக் உணவுகளில் கலந்துகொடுக்கின்றதான குற்றச்சாட்டும் அமைந்தது.
இந்த அச்சங்களைக் களையும் வகையில் சாதாரணமாக உணவுடன் கலப்பதன் மூலம் மலட்டுத் தன்மை மற்றும் குழந்தைப் பேற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எவ்வித கருத்தடை மாத்திரைகளும் தற்போது நடை முறையில் இல்லையென மருத்துவ நிபுணர்கள் நேற்றையதினம் ஆணித்தரமாக எடுத்துக்கூறியுள்ளனர்.
நிரந்தரமாக கருத்தடையை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு மாத்திரையும் இதுவரை மருந்து வர்த்தக துறையில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறியவில்லையென்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் மக்களிடையே ஓரளவில் எழுந்த பதற்ற நிலை, மற்றும் கண்டியிலும் அம்பாறையிலும் பாரிய இனக்கலவரமாக உருவாகுவதற்கு காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய மலட்டுத்தன்மை மாத்திரை தொடர்பிலேயே நேற்று இந்த மருத்துவ அதிகாரிகள் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்.
அம்பாறையில் வன்முறைகள் இடம்பெற்றதுமே இத்தகைய தெளிவுபடுத்தலை நிபுணர்கள் மூலமாக வழங்கியிருப்பின் கண்டியில் கலவரம் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பது பெருங்கேள்வியாக இருக்கின்றது.
இலங்கை மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சந்திரிக்கா விஜேரட்ன தலைமையில் நடத்தப்பட்ட இச்செய்தியாளர் மாநாட்டில் பெரும் எண்ணிக்கையான சிரேஷ்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
“எமது மருத்துவ அதிகாரிகள் குழுவானது எந்தவொரு துறைசார் அமைப்புக்களையும் சாராதது. தற்போதைய செய்திகளில் கூறப்படுவது போன்று பாரிய கலவரத்துக்கு காரணமாகியுள்ள வதந்தி தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாகவே இச்செய்தியாளர் மாநாட்டை நடத்துகின்றோம்” என்றும் டொக்டர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார்.
“மருந்து விற்பனைத் துறையானது பெண்கள் கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக உட்கொள்ளும் மருந்துகளைப் போலவே ஆண்களுக்கும் தற்காலிக கருத்தடையை ஏற்படுத்தக்கூடிய மாத்திரையொன்றை கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது.எனினும் இதுவரையில் அவ்வாறான மாத்திரையொன்று கண்டறியப்படவில்லை ” என்றும் மருத்துவ நிபுணர் டொக்டர் சாந்தனி வனிகதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஆண்களிடையே மலட்டுத் தன்மை அதிகரித்திருப்பதனை ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருப்பதாக மகப்பேற்று மருத்துவர் டொக்டர் லக்ஷ்மன் சேனாநாயக்க தெரிவித்தார். ” கடந்த காலங்களில் ஆண்கள் இதற்கான சோதனைகளை செய்ய முன்வருவதில்லை. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. ஆண்கள் தாமாகவே விரும்பி சோதனைகளுக்காக முன்வருகின்றனர். எனவே எமக்கு இது தொடர்பில் திட்டவட்டமான கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள முடிகிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றமே ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு பிரதான காரணமாகியுள்ளது.
ஆண்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்வது, நீண்ட நேரத்துக்கு இறுக்கமான ஆடைகளை அணிந்திருத்தல் என்பனவும் மலட்டுத் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அத்துடன் புகைபிடித்தல் மற்றும் மதுப் பழக்கமும் ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு காரணங்களாகும். என்றபோதும் கருத்தடை மாத்திரைகளால் ஆண்களுக்கு எவ்வித மலட்டுத் தன்மையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய சந்தர்ப்பங்களின்போது அரசாங்க பகுப்பாய்வு திணைக்களமே அதுபற்றிய இறுதி தீர்மானத்தை எடுக்குமென தடய அறிவியியல், நச்சுயியல் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் ரவீந்திர பெர்ணான்டோ தெரிவித்தார். அத்துடன் “மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிய கொத்து ரொட்டியிலிருந்து மீட்கப்பட்ட மூலப்பொருளை அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் சோதனைக்குட்படுத்தியபோது அது மாத்திரையல்ல என்றும் வெறும் மாவின் ஒரு பகுதியென்றும் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மாத்திரையல்லாத மாப்பொருள் ஒன்றின் காரணமாகவே துரதிஷ்டவசமாக பாரிய கலவரம் உருவானது ” என்றும் அவர் தெரிவித்தார்.
சாதாரண அறிவைக் கொண்ட மனிதர்களுக்கு கூட மாத்திரை எது என்பதும் மா எது என்பதையும் பகுத்தறியும் ஆற்றல் உள்ளநிலையில் ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி அவர்களின் பொருளாதாரத்தை நீர்மூலமாக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளதனை நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து ஆராயும் போது புரிந்துகொள்ளமுடியும். உடலில் ஒருவருக்கு ஏற்படுகின்ற மலட்டுத்தன்மை என்பது சரீரத்தில் காணப்படுகின்ற மூலக்கூறுகளில் ஏற்படும் பிரச்சனை. ஆனால் இன்றோ பலரும் சிந்திக்கும் ஆற்றல் இருந்தும் மனிதருக்கு தனித்துவமான பகுத்தறிவைப் பயன்படுத்தாது இருப்பது உளநிலையை மலடாக்கிவிடுகின்றது. இதுவே உண்மையில் அபாயகரமானது. மனித நிலையில் இருந்து மிருகங்களாகிப் போகின்றவர்களால் தானே தனது சொந்த மக்களுக்கு எதிராக இவ்வாறான கொடூரமான குற்றங்களை இழைக்க முடியும்!
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.