படைகளை விலக்கிக் கொள்ள சீன இராணுவம் மறுப்பதாக தகவல்!
In இந்தியா November 20, 2020 2:56 am GMT 0 Comments 1517 by : Krushnamoorthy Dushanthini

சீன இராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை எனவும், பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய-சீன இராணுவங்களிடையே 9ஆவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல் போக்கு – படை விலக்கம் பற்றி ஒரு பக்கம் பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தாலும், சீன இராணுவம் தொடர்ந்தும் நெருக்கடியை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாங்காங்சோ ஏரியின் வடகரையில் ஃபிங்கர் 4 பகுதியில் இருந்து ஃபிங்கர் 8 பகுதிக்கு சீன இராணுவம் பின்வாங்கிச் செல்லும் என கூறப்பட்ட நிலையில் ஃபிங்கர் 6 பகுதியில் இருந்து ஃபிங்கர் 8 பகுதி வரை அகலமான தார்சாலை அமைக்கும் பணியில் சீன இராணுவம் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த உப்புநீர் ஏரியின் வடகரையில் மீண்டும் மோதல் ஏற்பட்டால் படைகளை விரைந்து குவிப்பதே சீனாவின் நோக்கம் எனத் கூறப்படுகிறது. இதேபோல கல்வன் பள்ளத்தாக்கு தெப்சாங் சமவெளி மற்றும் பீடபூமிப் பகுதியில் உரசல் ஏற்பட்டுள்ள இடங்களில் வீரர்கள் தங்குமிடங்களையும் சீனா அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மோதல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற சீனாவின் நடவடிக்கைகள் 3 ஆயிரத்து 488 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் நீண்ட கால திட்டத்தினை மேற்கொள்ள அந்நாடு தயாராகி வருவதை காட்டுவதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
துருவப் பகுதி போல கடுங்குளிர் நிலவும் லடாக் எல்லையில் குளிர்காலம் முழுவதுமே படைகளை குவித்து இந்திய இராணுவம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.