பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இந்தியா February 13, 2021 6:05 am GMT 0 Comments 1197 by : Yuganthini

சிவகாசி அருகிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பணி புரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணி அளவில் திடீரென பயங்கர வெடி விபத்து அங்கு ஏற்பட்டது. இதன்போது 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.
இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகின. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன.
இந்த வெடிவிபத்து சத்தம் கேட்டு திரண்டு வந்த அயலூர் மக்கள் காயமடைந்தவர்களை விரைவாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த வெடி விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகவும் சிதைந்து போயும், கருகியும் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொலிஸார் விசாரணைக்குப் பின்னர் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஏனையவர்களின் உடல்களை அடையாளம் காண பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.