பதுளையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று – நால்வர் உயிரிழப்பு
In இலங்கை February 8, 2021 7:39 am GMT 0 Comments 1271 by : Dhackshala

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதுடன், அங்கு இதுவரையில் கொரோனா தொற்றினால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் அங்கு 197 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் இதுவரையில் பதுளை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மொத்தமாக 584 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட கொவிட்-19 தடுப்பு செயலணியினர் தெரிவித்துள்ளனர்.
பதுளையில் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, பசறை, பண்டாரவளை, தியத்தலாவை, ரிதிமாலியத்தை, மகியங்கனை, வெலிமடை போன்ற இடங்களில் ஏனைய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெலிமடையில் ஒருவர் தியத்தலாவையில் இருவர், மகியங்கனையில் ஒருவர் உள்ளிட்டு நான்கு பேர், கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளனர்.
அத்தோடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகியங்கனைப் பகுதியில் இரு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்விரு ஆடைத் தொழிற்சாலைகளில் சுமார் 185 பேர் வரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பதுளை மாவட்ட கொவிட் 19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.
அத்துடன் பதுளை மாவட்டத்தில 617 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.