பயங்கரவாதத்தை ஒழிக்க விசேட குழுவொன்றை அனுப்ப ஐ.நா. தீர்மானம்
In ஆசிரியர் தெரிவு May 1, 2019 5:27 am GMT 0 Comments 2008 by : Dhackshala
பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானித்துள்ளதாக ஐ.நா.வின் பிரதி பொதுச் செயலாளர் மிகாலே ஏங்கள் மொரசினஸ் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. செயலாளர் பாராட்டுக்களைத் தெரிவித்ததாகவும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பினை ஐ.நா. வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா. செயலாளரின் விசேட பிரதிநிதியாக நாட்டுக்கு வருகைதந்துள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதியை சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஸ்பெயின் நாட்டின் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் முன்னாள் தலைவருமான மிகாலே ஏன்ஜன் மொரசினஸ், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸின் விசேட பிரதிநிதியாக தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவர், நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியை சந்தித்து, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக துரித நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இதன்போது அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
அத்தோடு, இது ஏனைய உலகத் தலைவர்களுக்கு முன்னுதாரணமான செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐ.நா. பிரதி பொதுச்செயலாளர், இலங்கை ஜனாதிபதியினால் தற்போது முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இன்று முழு உலகத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்த நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக ஐ.நா. பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்ப ஐ.நா. பொதுச்செயலாளர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது நாடான ஸ்பெயின் நாட்டில் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற அல்கைதா தாக்குதலை இதன்போது நினைவுகூர்ந்த பிரதிப் பொதுச்செயலாளர், ஸ்பெயின் நாட்டைப் போன்றே இலங்கையும் நட்புறவான பல சமூகங்களைக் கொண்ட சிறந்த விருந்தோம்பல் நாடாகும் என்றும் அவ்வாறான நாடுகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகுதல் துரதிஷ்டவசமானவை என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின்போது, ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் பிரதிப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த துயரமான சந்தர்ப்பத்தில் ஐ.நா. சபையின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பது பெரும் பலமாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கை பாதுகாப்பு துறையினரிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அதற்காக கிடைக்கப்பெறும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மிக முக்கியமானது என்றும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டிற்குள் கொண்டுவர தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.