பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தன்னுடைய நிபுணத்துவத்தை கோரவில்லை – பொன்சேகா
In இலங்கை April 24, 2019 6:42 am GMT 0 Comments 1763 by : Jeyachandran Vithushan
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தன்னுடைய நிபுணத்துவத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நாடாளுமன்றில் தானே மிகவும் அனுபவம் வாய்ந்த இராணுவ நபர் என கூறிய அவர் இந்த அனுபவத்தின் காரணமாகவே பீல்ட் மார்ஷல் ஆக இருக்கிறேன் என்றும் கூறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பது இல்லை. நாட்டின் பாதுகாப்பு எப்போதும் உறுதிபடுத்தப்பட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு அடுத்ததே பொருளாதாரம். ஏனெனில் பாதுகாப்பு இல்லாதவிடத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
ஆனால், பாதுகாப்பையும், இராணுவத்தையும் பலப்படுத்துவதன் மூலம் வாக்குகளை பெற முடியாது என்பதால் அது தொடர்பாக எமது அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கான பிரதிபலனையே நாம் எதிர்கொண்டிருக்கிறோம். நாட்டில் பாதுகாப்பு இல்லையெனில் பொறுப்புவாய்ந்தவர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பதே புலனாகிறது. இதற்கு அனைவரும் பொறுப்புகூற வேண்டும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் பொறுப்புகூற வேண்டும்.
ஏனெனில், இவ்வாறான தாக்குதல் ஓரிரவில் திட்டமிடப்பட்டதாக இருக்க முடியாது. இது குறைந்தது ஏழு, எட்டு வருடங்களாக திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்த நால்வர், ஐவர் மாத்திரமல்ல. இதன் பின்னணியில் 300, 400 பேர் இருக்கக்கூடும்.
இச்சம்பவம் இடம்பெறும்போது சிங்கப்பூரில் இருந்த நாட்டின் ஜனாதிபதி உடனடியாக நாடு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவரது வருகையின் தாமதம் அவரது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்தின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.