பயணப்பாதை சரியானதாக அமைந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும்
In சிறப்புக் கட்டுரைகள் May 1, 2018 7:52 am GMT 0 Comments 2338 by : Arun Arokianathan
நாணயப் பெறுமதி வீழ்ச்சி, இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. “மிதக்கும்” சந்தையில் (Floating Market) ஏற்பட்ட மாற்றமே நாணயப் பெறுமதி வீழ்ச்சிக்குக் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்திருக்கிறார். 2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி அறிக்கையை சமர்ப்பித்து ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக இலங்கையின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதனால் நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீள முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் மாற்று வழியொன்று தேடவேண்டிய அவசியம் காணப்படுவதை மத்திய வங்கி ஆளுநர் சூசகமாகக் குறிப்பிடத்தவறவில்லை. ரூபாவின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் அதில் மத்திய வங்கி தலையிடுவது தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
கடந்த வருடத்தில் மத்திய வங்கி டொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லையென தீர்மானித்திருந்தது. இலங்கை மிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கையை கடைப்பிடித்துவருகின்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இது மிதக்கும் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகும். இந்த நிலை தொடருமானால் பொருளாதார ஸ்திரத்தன்மையை இழக்கும் நிலை ஏற்படலாமென பொருளாதார ஆய்வாளர் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் நாட்டின் நாணய மாற்று இருப்பு 9.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதாகவும் இந்த வருடத்தில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை மத்திய வங்கி கொண்டிருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதைய பெறுமதி வீழ்ச்சி பாதகமானதாகக் காணப்படவில்லையெனவும். இது மேலும் தொடருமானால் சவால்களை சந்திக்க வேண்டி வருமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் செயற்கையான தோற்றப்பாட்டை ஏற்படுத்த நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முனைப்புக் காட்டினால் அதனைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி நேரடியாக தலையிடும் என அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
நாணயப் பெறுமதியை உயர்த்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பொருளாதார நிபுணர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய வங்கி அடுத்து வரும் நாட்களில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு விதத்தில் நோக்குகின்ற போது வருடத்தில் சித்திரை மாதத்தில் புத்தாண்டு காலப் பகுதியில் நாணயப் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுவது வழமையான ஒன்றாகக் காணப்படுவதால் அதனை ஒட்டுமொத்த நிதி பரிமாற்றத்தோடு ஒப்பிடமுடியாது. அடுத்து வரக்கூடிய நாட்களில் நாணயப் பெறுமதி உயர்வதற்கு சாதகமான சூழ்நிலை காணப்படுவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இன்னுமொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அண்மைய காலத்தில் டொலருக்கு நிகரான பிராந்திய நாடுகளின் நாணயப் பெறுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் அவதானிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் 4.8 வீதமாகவும், பிலிப்பைன்ஸில் 44 வீதமாகவும், இந்தோனேஷியாவில் 4 வீதமாகவும், அவுஸ்திரேலியாவில் 2.7 வீதமாகவும் வீழ்ச்சி கண்டுள்ளன. புத்தாண்டின் பின்னர் டொலருக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக மிதக்கும் சந்தையில் நாணயப் பெறுமதி அதிகரித்தது. இது இலங்கை நாணயத்தின் பெறுமதியை 1.6 வீதமாக மட்டுமே வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து கூடிய விரைவில் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை மத்திய வங்கி கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இதேவேளை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில் மீளச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை அதிகரிக்கலாம். எனத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானதெனவும் நம்பகத் தன்மை கொண்டதல்லவெனவும் அரசு பகிரங்கமாகவே அறிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களை குழப்பும் சதி முயற்சிகளில் இதுவும் ஒன்று என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சுயநல நோக்கம் கொண்ட தீய சக்திகள் நாட்டின் இயல்பு நிலையை சீர்குலைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. மக்கள் இவர்கள் விடயத்தில் விழிப்புடன் செயற்படவேண்டும்.
2017இல் ஏற்பட்ட வரட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அனல் மின் நிலையங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தமையால் அதற்கான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டமையாலும் பண சமநிலையை பேண முடியாத நிலை ஏற்பட்டதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான நெருக்கடிகளிலிருந்து மீள்வதென்பது கஷ்டமான காரியம் என்பதை புரிந்து கொள்வோமானால் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள முடியும்.
என்றாலும் கூட கடந்து போனவற்றுக்கு நியாயம் கற்பிப்பதோ, இயலாமையை வெளிப்படுத்துவதோ மத்திய வங்கியின் செயற்பாடாக இருக்க முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை கவனத்தில் கொண்டு உரிய மாற்று ஏற்பாடுகளைக் கையாள வேண்டும். பொருளாதார ஸ்திர நிலையை ஏற்படுத்தக் கூடிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னகர்த்தப்பட வேண்டும். 2018இல் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக எதிர்பார்த்த போதும் அதனை அடையக் கூடிய உறுதியான செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.
பயணப்பாதை சரியானதாக அமைந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். வெறுமனே அறிக்கைகளோடு எதனையும் சாதித்து விட முடியாது. செயற்பாடுகள் தூரநோக்கு கொண்டவையாகவும், தெளிவானவையாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படக் கூடியதாக அது அமையப் பெறுவது மிக முக்கியமானதென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.