பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – டக்ளஸ் உறுதி!
In இலங்கை February 10, 2021 10:45 am GMT 0 Comments 1281 by : Vithushagan

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் சிலரின் தவறான புரிதல் காரணமாக கைநழுவிப் போகும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் அதனை மீளப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையில் தற்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது பங்களிப்புடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எந்த ஓர் அபிவிருத்தி முயற்சிகளின் போதும் அது தொடர்பான சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் குறித்தான கருத்தாடல்கள் அல்லது கருத்து முரண்கள் தோன்றுவது இயல்பானதொன்றுதான்.
அதுபோன்றுதான் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தியிலும் அதனால் ஏற்படும் சாதக பாதக தன்மை குறித்து நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் ஒருசிலரிடையே இருந்துவந்தன.
எனினும், குறித்த அபிவிருத்தியால் பருத்தித்துறை துறைமுகம் மாத்திரமன்றி, குருநகர் மற்றும் பேசாலை துறைமுகங்களும், அதற்கு மேலதிகமாக பல்வேறு நங்கூரமிடும் தளங்கள் மற்றும் இறங்கு துறைகளும் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.
குறித்த திட்டத்தினால் வடக்கு மாகாணத்தின் துறைமுகப் பகுதி சார்ந்த மக்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்கும் நன்மை பெறும் என்ற கருத்துக்களை முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த அபிவிருத்தியால் ஏற்படக் கூடிய சந்தேகங்களைப் போக்குகின்ற வகையிலான செயற்திட்டங்கள் விழிப்புணர்வுச் செயற்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு மக்களுக்க தெளிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் பருத்தித்துறை துறைமுகத்தை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு உகந்த நிலைபேறான இடமாக ஆய்வகள் அடையாளம் கண்டுள்ளதுடன் இந்த திட்டமானது அத்துறைமுகத்தின் படுக்கையை 12 ஹெக்டேயர்களாகவும் 5 மீற்றர் ஆழம் கொண்டதாகவும் அமைப்பதுடன் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளின் செயற்பாடுகளை வசதிப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
அத்துடன் இதன் உத்தேசமதிப்பீட்டுத் தொகை ரூபா 6 பில்லியன்களாகும். இது அலை தாங்கி, கப்பல்துறை சுவர், ஏலம்விடப்படும் அறை, குளிரூட்டும் அறைகள், குளிரூட்டிகள், ஆழமாக்கும் வசதிகள் மற்றும் படகுகள் திருத்தும் வசதிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படும் அதேவேளை டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தினை ஒத்ததாக விருத்தி செய்யப்படுவதுடன் மீனவர்கள் சர்வதேச கடல்பரப்பில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களையும் இது கொண்டுள்ளது.
அதனடிப்படையில் எமது பிரதேசத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் கை நழுவிப்போகும் நிலையில் காணப்பட்ட குறித்த திட்டததை மீளவும் முன்னெடுக்க தற்போது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.