பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் – பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை பல்கலைக்கழக மாணவர்களினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துமிருந்தனர். இதன்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது பொலிஸார் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
இதுகுறித்த ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், பல்வேறு தரப்பினரும் அதற்கு கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொலிஸார் தவறிழைத்தமை உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல தடவைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது குறிப்பாக மாணவிகள் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருந்தனர். எனினும் இதுவரையில் இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என மாணவர் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த பொலிஸ் துறைக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.