பல்கலை மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு சி.வி. வலியுறுத்து!
In இலங்கை May 4, 2019 5:41 am GMT 0 Comments 2540 by : Dhackshala
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மனித உரிமையை பாதுகாக்கும் வகையில், அவசரகால சட்டத்தை அரசாங்கம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதையடுத்து, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னிலைப்படுத்தி பாதுகாப்பு என்ற போர்வையில் வட. மாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிஸாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எல்லா மாகாணங்களுக்கும் இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணம் தொடர்ந்தும் உச்ச அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்ந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது நல்லிணக்கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்று தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், பொலிஸார் மூலம் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் தெளிவான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும்கூட எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் விட்டமையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற்பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அவசரகால நிலைமை எந்தளவுக்குப் பொதுமக்களின் சுதந்திரங்களைப் பாதித்ததுடன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்பதை நாம் கண்டுள்ளோம். இன்று பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை மீண்டும் அந்த நிலைமை ஏற்படப்போகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, இந்த மாணவர்களின் கைதை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்றும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவசரகாலச் சட்டத்தின் ஊடாக அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும் என்றும் பயங்கரவாதத்தை முறியடிக்கும் வகையில் பொலிஸ் திணைக்களத்தைப் பலப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.