பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முடிந்துவிட்டன. அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக நிலவும் பனிப்போர் ஒரே இரவில் முடிவுக்கு வராது.
பிடன், வெள்ளை மாளிகையில் நுழைந்த பின்னர் சீனா மீதான பொதுமக்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அமெரிக்க சமூகம் சிதைந்துவிட்டது. இதனை சரிசெய்வதறகு பிடனால் ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
பிடன் நிச்சயமாக மிகவும் பலவீனமான ஜனாதிபதியாகவே இருப்பார். எனவே, உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், அவர் இராஜதந்திர ரீதியாக ஏதாவது செய்வார். சீனாவுக்கு எதிராகவும் ஏதாவது செய்வார். ட்ரம்ப் போரில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதியான பிடன் போர்களைத் தொடங்குவார்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.