பழிபோட்டு தப்பிக்கொள்ளும் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்!
In சிறப்புக் கட்டுரைகள் January 23, 2018 6:24 am GMT 0 Comments 3059 by : Varshini
அரசியல்வாதிகள் தமது பக்கத்திலுள்ள தவறுகளை மறைப்பதற்கு எதிர்க்கட்சியினரிடமுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி மக்களைத் திசைதிருப்பிவிடுகின்ற கைங்கரியத்தில் கில்லாடிகள். நேற்றுமுன்தினம் இலங்கையின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்து இதனை மீண்டும் நினைவுறுத்தி நிற்கின்றது.
யுத்தம் நடந்த நிலையிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்பது வருட ஆட்சிக்காலத்தில் இலங்கையின் தேசிய கடன்தொகையானது 5,200 பில்லியன்களால் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி ரூபாய்க்கு சமம்) அதிகரித்ததாகவும் ஆனால் யுத்தம் ஏதும் இல்லாத நிலையிலும் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறாத நிலையிலும் கடந்த 3 வருட காலத்தில் 3000 பில்லியன்களால் தேசிய கடன்தொகை அதிகரித்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்தார். இது அண்ணளவாக நாளொன்றுக்கு 3 பில்லியன்கள் (300 கோடி) கடன்சுமை என அவர் கூறியிருந்தார்.
”கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம்.
எதிர்காலச் சந்ததியைப் பற்றி எவ்வித அக்கறையும் இன்றி கடன்களை வாங்கிக் குவித்துவிட்டு அவற்றை மீள் செலுத்த திண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலைமைக்கு காரணமான அனைத்து தரப்பினருமே தலைகுனியவேண்டும்.
தற்போதைய நிலையில் இலங்கைக்குள்ள பொதுக்கடன்களின் மொத்தத் தொகை 64 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதிலும் குறிப்பாக தனிநபர் மீதுள்ள கடன் சுமையானது 3012 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாயாக தனிநபர் மீதான கடன் சுமை காணப்படுகின்றது.
பிறக்கும் போதே கடனில் பிறந்தால் எப்படி முன்னேற்றம் காணமுடியும், கொடுப்பதற்கு வழி என்ன என்பதை அறிந்துகொண்டே கடன்படவேண்டும். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடன் பெறுவதென்றால் அந்த அபிவிருத்தித் திட்டங்களால் பலாபலன் இருப்பதை உறுதிசெய்துகொண்டே அவற்றை ஆரம்பித்திருக்க வேண்டும். அதனைவிடுத்து தமது ஊருக்கும் பேருக்கும் ஆட்சி அதிகார நிலைப்பு ஆசைக்குமாக அள்ளி அள்ளிக் கடன்பட்டுவிட்டு மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி தப்பிக்க எண்ணக்கூடாது. ஆட்களே இல்லாத ஊர்களில் நான்கு வழிப்பாதையின் அவசியம்தான் என்ன? ஏற்கனவே தலைநகரிலுள்ள மைதானங்களே ஆண்டிற்கு ஒரு சர்வதேச போட்டியை நடத்தினாலே பெரும்பாடு என்ற நிலை இருக்கும் போது அங்குமிங்குமாக ஆட்கள் வாழும் பகுதியில் கிரிக்கட் மைதானத்தின் தேவை என்ன ?
விமானங்களே வராத இடத்தில் விமானநிலையத்திற்கான தேவைப்பாடுதான் என்ன என்பது தொடர்பாக நமால் ராஜபக்ஷ போன்றவர்கள் சிந்திப்பார்களா? நம்மிடம் பணம் இருக்குமிடத்து அதை வைத்துக்கொண்டு இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதில் தவறில்லை. அரசாங்கத்திலுள்ள ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் கொடுப்பதற்கே வெளிநாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களாக வேலைசெய்யும் நம் பெண்கள் அனுப்பும் அந்நியச் செலாவணியை எதிர்பார்த்து நிற்கும் நிலையில், இவ்வாறான பயன்தராத லாபமீட்டாத வெள்ளை யானை அபிவிருத்திகள் நமக்கு அவசியமா என்பதை கடன்படுவதற்கு முன்னர் சிந்தித்திருந்தால் கடன்பொறிக்குள் நாம் சிக்கிக்கொண்டிருக்கமாட்டோம் என்பதை நாமல் போன்ற அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அதிகாரத்தின் முன் மக்கள் இன்று மௌனியாக கைகட்டி நிற்கலாம். ஆனால் காலம் வரும் போது இவ்வாறானவர்களுக்கு தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என்பதை கடந்த காலத்திலும் எமது மக்கள் உணர்த்தியுள்ளனர். எதிர்காலத்திலும் உணர்த்துவர். தமது சுயநல சொகுசு வாழ்விற்காக அதிகார மோகத்திற்காக மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என கடன்சுமையை அதிகரித்தவர்கள் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்.
-நிதர்ஷனன்-
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.