பாகிஸ்தானின் பயங்கரவாத செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் – இந்தியா வலியுறுத்து!
In இந்தியா February 12, 2021 5:52 am GMT 0 Comments 1247 by : Krushnamoorthy Dushanthini

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும் பிற பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும்’ என ஐ.நா சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் சர்வதேச அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த 12வது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் “ஐ.எஸ். அமைப்பின் புதிய தளபதி ஷிஹப் அல் முஹாஜிர், இந்தியா, ஆப்கன், பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளில் பயங்கரவாத செயல்களுக்கு பொறுப்பேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 2200 பேர் தலைநகர் காபூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கை ஐ.எஸ். பயங்கரவாத செயல்களை மட்டும் ஒருதலைப்பட்சமாக ஆராய்ந்துள்ளது.
பாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல அமைப்புகள் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுகின்றன.இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டால் தான் தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த முழுமையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.